சென்னை: கிருமித்தொற்றுப் பரவலைக் கட்டுக்குள் வைக்க தமிழக அரசு நேற்று முதல் பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியது.
இதன்படி பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என்றும் பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும் திருவிழாக்கள், மதம் சார்ந்த கூட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் தற்போதுள்ள நடைமுறைகளின்படி எந்தவிதமான தளர்வுகளும் இன்றி ஊரடங்கு முழுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளது. சலூன் கடைகள், அழகு நிலையங்கள், உடற்பயிற்சி கூடங்களில் 50 விழுக்காடு அளவுக்குத்தான் இப்போது மக்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
அரசின் புதிய கட்டுப்பாடு பற்றிய அறிவிப்புகள் கடை முன்பு ஒட்டப்பட்டுள்ளன.
பாதுகாப்பு நெறிமுறைகளை கடைப்பிடிக்காமல் இருந்தால் ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்ற எச்சரிக்கை பிரசுரங்களையும் உள்ளாட்சி அமைப்பு ஊழியர்கள் கடை கடையாக விநியோகித்து வருகின்றனர். அரசு வழிகாட்டுதலை கடைப் பிடிக்காமல் 2 முறைக்கு மேல் கட்டுப்பாடுகளை மீறினால் கடை களுக்கு சீல் வைக்கப்படும் என்றும் அதில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே தமிழ்நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டும், பொது மக்களின் நலன் கருதியும் இம்மாதம் 30ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஆனால் புதிய கட்டுப்பாடு களால் பலன் கிடைக்காவிட்டால் இரவுநேர கொரோனா ஊரடங்கு மற்றும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க நேரிடும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.

