'ஆளுநருக்கு அதிகாரமில்லை'
சென்னை: துணைவேந்தர்களை நியமிக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். "பெயரளவுக்குத்தான் தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி ஆட்சி நடக்குதே தவிர, அதன் மூக்கணாங்கயிறோ மத்திய பாஜக அரசிடம்தான் இருக்கிறது. பல்கலைக்கழகத் துணை வேந்தர்களை நியமிக்க ஆளுநருக்கு நேரடியான அதிகாரம் கிடையாது. அப்படியிருந்தும் ஆளுநர் அந்த அதிகாரத்தை தன் கையில் எடுத்துக்கொண்டு செயல்படுவது எப்படி? மாநிலத்தின் கல்வி உரிமைகளை வெளியில் இருந்து மத்திய அரசால் பறிக்கப்படுவதற்கும் மாநிலத்துக்கு உள்ளேயே ஆளுநரால் பறிக்கப்படுவதற்கும் முடிவு கட்டவேண்டும்," என்று அறிக்கையில் கி. வீரமணி தெரிவித்துள்ளார்.
இளையர்கள் கொலை;
'அமமுக' தினகரன் கண்டனம்
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள சோகனூர் பகுதியைச் சேர்ந்த அர்ஜூன், செப்பேடு பகுதியை சேர்ந்த சூர்யா ஆகிய இரண்டு இளைஞர்கள் கடந்த 7 ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டதற்கு அமமுக பொதுச் செயலாளர் தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். "இரு இளைஞர்கள் முன்விரோதத்தால் கொடூரமாக கொல்லப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. பெரும் அதிர்ச்சியளிக்கக்கூடிய இந்தப் பாதகத்தைச் செய்தவர்கள் மீது காவல்துறை உறுதியான நடவடிக்கை எடுக்கவேண்டும்," என்று டுவிட்டர் பதிவில் தினகரன் கூறியுள்ளார். ஏற்கெனவே இந்தக் கொலைக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

