மதுரை: மதுரை சித்திரை திருவிழா இவ்வாண்டும் ரத்து செய்யப்பட்டதால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கொரோனா பரவல் காரணமாக மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த ஆண்டு நடக்கவில்லை. எனவே இவ்வாண்டு திருவிழா நடக்கும் என்று பக்தர்கள் எதிர்பார்த்து இருந்தனர்.
இந்த நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவுக்கு இந்த ஆண்டும் தமிழக அரசு தடை விதித்து உள்ளது. இதனால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அம்மன் கோவில் பக்தர்களில் ஒருவரான அவனியாபுரம் பொண்ணு, "மதுரையில் சட்டசபைத் தேர்தல் காலக் கட்டத்தில் கிருமிப் பரவல் இருந்தது. அப்போது தமிழக அரசு ஏன் தேர்தலுக்கு தடை விதிக்கவில்லை? அப்போது எல்லாம் பரவாத கொரோனா நோய் இப்போது பரவப்போகிறதா," என்று கேள்வியெழுப்பினார்.
ஜெய்ஹிந்துபுரம் செந்தமிழ்ச்செல்வி எனும் பக்தர், "எங்களது மனக்குமுறல்களை மீனாட்சி அம்மனிடம் தெரிவித்துவிட்டுத்தான் வந்திருக்கிறேன். அம்மன் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்," என்றார்.
தவிட்டுச் சந்தையைச் சேர்ந்த முத்துமாரி ஜெயக்குமார், "சித்திரை திருவிழாவின்போது பக்தர்கள் மீது மஞ்சள் தண்ணீர் தெளிப்பார்கள். அது கிருமி நாசினி. இதனால் பக்தர்களுக்கு நோய் நொடி அண்டாது. எனவே அரசு உடனடியாக சித்திரைத் திருவிழாவை நடத்த வேண்டும்," என்று கேட்டுக் கொண்டார்.

