சென்னை: கொரோனா கிருமித் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மட்டுமின்றி உயி ரிழப்போரின் எண்ணிக்கையும் நாளும் அதிகரித்து வருகிறது.
இந்தக் கிருமிப் பரவலின் தீவி ரத்தைக் கட்டுப்படுத்தி, மேலும் அதிகளவில் உயிரிழப்புகள் ஏற்படாமல் தடுக்கவேண்டும் என்பதே மாநில அரசின் தலையாய இலக்காக உள்ளதாக சுகாதாரத் துறையின் முதன்மைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறினார்.
சென்னை-திருவல்லிக்கேணியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழகத்தில் கிருமிப் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை வழங்குவதற்கு தோதாக பல மாவட்டங்களிலும் கொரோனா சிகிச்சை மையங்களை அதிகரித்து வருகிறோம்.
"சென்னை, செங்கல்பட்டு, திரு வள்ளூர், நாகை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில்தான் இந்தப் பாதிப்பு அதிகம் தென்படுகிறது.
"கிருமிப் பரவலால் ஏற்படும் உயிரிழப்பைத் தடுப்பதே சுகாதாரத் துறையின் முக்கிய இலக்காக உள்ளது," என்று கூறினார்.
ஒவ்வொரு நாளும் கூடுதல் பரிசோதனைகள் செய்து, தொற்றுள்ளவா்களைக் கண்டுபிடித்து, அவா்களைத் தனிமைப்படுத்தி, அவா்கள் மூலம் மேலும் பலருக்கு கிருமி பரவாமல் தடுக்கும் பணியும் போா்க்கால அடிப்படையில் முடுக்கி விடப்பட்டுள்ளதாகவும் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
பொதுமக்களும் முகக்கவசம், தனிநபர் இடைவெளி உள்ளிட்ட அடிப்படை பாதுகாப்பு விதிமுறை களைப் பின்பற்றி கிருமி பரவுவதைத் தடுக்க ஒத்துழைப்பு அளிக்கவேண்டும்.
இதுபோல் சரிவர ஒத்துழைப்பு வழங்காமல் போனால் ஏற்கெனவே நடப்பில் உள்ள கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.
"தற்போது மாநிலத்தில் 33,659 பேரும் அவர்களில் சென்னையில் மட்டும் 12,861 பேரும் இத்தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
"மாநிலத்தில் கொரோனா தடுப்பூசிக்கு பற்றாக்குறை இல்லை. 18 லட்சம் தடுப்பூசிகள் இருப்பில் உள்ளன. இனி வரும் நாட்களில் தினமும் இரண்டு லட்சம் பேருக்கு ஊசி போட இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது நாளொன்றுக்கு 1.2 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன," என்று அவர் கூறினார்.

