விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் உயிரிழந்த நிலையில், அத்தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கையும் மே 2ஆம் தேதியே நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
"வாக்கு எண்ணிக்கை வழக்கம்போல நடைபெறும். தேர்தலில் மாதவராவ் வெற்றிபெறும் பட்சத்தில் அத்தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்படும். ஆனால், தோல்வி அடைந்தால் இடைத்தேர்தலுக்கு வாய்ப்பில்லை," என்றார்.
மாதவராவ் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, பாஜகவின் பொன்.ராதாகிருஷ்ணன், காங்கிரஸ் கட்சி தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
காங்கிரஸ் கட்சியின் பீட்டர் அல்போன்ஸ் கூறுகையில், "பல தேர்தல்களில் அவர் வாய்ப்பு கேட்டபோதெல்லாம் அவருக்கு பல்வேறு சூழ்நிலை காரணமாக கிடைக்கவில்லை. இம்முறை பல முயற்சிகளுக்குப் பிறகு வாய்ப்பு கிட்டியது. ஆனால், பயனற்று போய்விட்டது," என்று தெரிவித்துள்ளார்.
35 ஆண்டுகால நண்பர். கலப்படமில்லாத காங்கிரஸ்காரர். வெற்றிக்கனியைக் கொய்யும் வேளையில் அவர் உயிரிழந்தார் என்பது பெரும் பேரிடி.
காங்கிரஸ் கட்சியின் பீட்டர் அல்போன்ஸ்

