கும்பகோணம்: தமிழகத்தில் கொரோனா கிருமிப் பரவலால் பொதுமக்கள் மட்டுமின்றி, அரசியல்வாதிகளும் அடுத்தடுத்து பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தேர்தலுக்கு முன்பு தொடங்கிய கிருமிப் பரவலின் தாக்கம் வாக்களிப்புக்குப் பிறகும் தொடர்வதால் வேட்பாளர்கள் பலரும் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ், 63, கடந்த ஞாயிறன்று காலை கிருமி பாதிப்பால் உயிரிழந்தார்.
இந்நிலையில், கும்பகோணம் தொகுதி அதிமுக வேட்பாளர் ஸ்ரீதர் வாண்டையார், 65, கிருமி பாதிப்பு காரணமாக தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
ஏற்கெனவே, பல்லடம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் எம்.எஸ்.எம்.ஆனந்தனுக்கு, 64, கொரோனா பாதிப்பு உறுதியாகி, கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஆனந்தனுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
தேர்தல் பிரசாரத்தின்போதே மநீம கட்சியின் வேளச்சேரி தொகுதி வேட்பாளர் சந்தோஷ் பாபு கொரோனாவால் பாதிக்கப்பட்டார்.
அதன்பின்னர், அண்ணா நகர் தொகுதி வேட்பாளர் பொன்ராஜ், சேலம் மேற்குத் தொகுதி தேமுதிக வேட்பாளர் அழகாபுரம் மோகன் ராஜ், விருகம்பாக்கம் தொகுதி தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதி, திருவள்ளூர் அமமுக வேட்பாளர் குரு, திமுகவின் குறிஞ்சிப்பாடி தொகுதி வேட்பாளர் பன்னீர்செல்வம், அம்பத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் ஜோசப் சாமுவேல் ஆகியோரும் பாதிக்கப்பட்டனர்.
தேர்தலுக்குப் பிறகு திருப்பெரும்புதூர் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் செல்வப்பெருந்தகை, பெருந்துறை தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ்.ஜெயக்குமார், தியாகராய நகர் தொகுதி திமுக வேட்பாளர் ஜெ.கருணாநிதி ஆகியோருக்கும் கிருமித்தொற்று பாதிப்பு உறுதியானது.
பாஜகவின் அரவக்குறிச்சி வேட்பாளர் அண்ணாமலைக்கும் கிருமிப் பரவல் உறுதி செய்யப்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

