சென்னை: தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் தலைநகர் சென்னையில் மட்டும் கிருமி பரவும் வேகம் அதிகரித்து வருவதால், ரயில் பெட்டிகளைக் கொரோனா சிகிச்சைக்கு ஒதுக்கித்தர தயாராக இருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியபோது, "கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெறுவதற்கு தோதாக 500 ரயில் பெட்டிகள் தயார் நிலையில் உள்ளன. தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகளின் விருப்பத்துக்ேகற்ப ரயில் பெட்டிகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இத்தகவலை ஏற்கெனவே தமிழக அரசுக்கும் தெரிவித்துவிட்டோம்," என்றனர்.
மாநிலத்தில் கடந்த 24 மணி ேநரத்தில் மட்டும் 6,618 பேருக்கு கிருமித்தொற்று உறுதியானது. இவர்களில் சென்னையில் 2,123 பேர் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், சென்னையில் கொரோனா நோயாளிகளால் மருத்துவமனை படுக்கைகள் நிரம்பி வருகின்றன. மாநகராட்சி மருத்துவமனைகளிலும் 60% படுக்கை கள் நிரம்பிவிட்டன.
சென்னையில் பாதிப்பு மோசமாக உள்ளதால் மாநில கல்லூரி விடுதி, அண்ணா பல்கலைக்கழகம், பாரதி கல்லூரி உள்பட பல்வேறு கல்வி நிறுவன வளாகங்கள் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெறும் வார்டுகளாக மாற்றப்பட உள்ளன.

