சேலம்: தனது 10 வயது மகளை ரூ.10 லட்சத்துக்கு விற்றுவிட்டதாக பெற்ற தாய் ஒருவர் பேசும் கைபேசி உரையாடல் பதிவு சமூக ஊடகங்களில் வெளியான நிலையில், விற்கப்பட்ட சிறுமியை தொழிலதிபரிடம் இருந்து போலிசார் மீட்டுள்ளனர்.
சேலம் அன்னதானப்பட்டி பகுதி யைச் சேர்ந்தவர் சின்னப்பொண்ணு. இவரது மகள் சுமதிக்கு இரு பெண் குழந்தைகள், ஒரு மகன் உள்ளனர்.
சுமதியின் கணவர் சதீஷ் கோழிக்கறி விற்பனைக் கடையில் வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில், வறுமை காரண மாக பாட்டியிடம் வளர்ந்து வந்த மகளை, கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு சுமதி தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றுவிட்டார்.
அதன்பின்னர், சேலம் குகை பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் கிருஷ்ணன் என்பவர் தனியாக வசித்து வரும் நிலையில், அவரது வீட்டில் வீட்டு வேலைகள் செய்வதற்கு சுமதி மகளைச் சேர்த்துவிட்டதாக கூறப்படுகிறது.
இதனையறிந்த சிறுமியின் பாட்டி சேலம் டவுன் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித் ததை அடுத்து, சிறுமி மீட்கப்பட்டு சேலத்தில் உள்ள காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையே, சிறுமியின் தாய் சுமதி, தனது உறவுக்கார பெண்ணிடம் ரூ.10 லட்சத்துக்குப் பெண் குழந்தையை விற்றதாகப் பேசும் கைபேசி உரையாடல் பதிவு சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தனது வீடு வாங்கும் கனவு இதன்மூலம் நிறைவேறிவிட்டதாக சுமதி கூறுவதை சகித்துக்கொள்ள முடியாத அந்த உறவுக்காரப் பெண், "உனக்கு மனசாட்சியே இல்லையா?" என வசைபாடும் உரையாடலும் இடம்பெற்றுள்ளது.
சுமதியிடம் போலிசாரின் தீவிர விசாரணை தொடர்கிறது.