சென்னை: தமிழகத்தில் முதல் தடுப்பூசித் திருவிழா வெற்றி பெற்றதைத் தொடர்ந்து மீண்டும் மற்றொரு தடுப்பூசித் திருவிழா அறிவிக்கப்பட்டு உள்ளது.
நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.
இதுவரை 2 கோடியே 3 லட்சத்து 54 ஆயிரத்து 41 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப் பட்டுள்ளது.
இதில் 9 லட்சத்து 47 ஆயிரத்து 129 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 5 லட்சத்து 71 ஆயிரத்து 717 பேர் ஆண்கள், 3 லட்சத்து 75 ஆயிரத்து 376 பேர் பெண்கள், 36 பேர் மூன்றாம் பாலினத்தவர்கள்.
கடந்த மாதத்திலிருந்து நாடு முழுவதும் கொரோனா 2வது அலை வேகமாகப் பரவியதால் தினசரி பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. தற்போது தினசரி பாதிப்பு 1 லட்சத்து 60 ஆயிரத்தைக் கடந்துவிட்டது.
இதையடுத்து தடுப்பூசி போடும் பணிகளை விரைவுபடுத்த பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார்.
இதற்காக மத்திய அரசு சார்பில் தடுப்பூசித் திருவிழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
அதன்படி இந்தியாவில் 4 நாள் தடுப்பூசித் திருவிழா கடந்த 11ஆம் தேதி தொடங்கியது.
இதில் பங்கேற்று ஏராளமானோர் ஆர்வமுடன் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
இந்த நிலையில் மத்திய அரசின் தடுப்பூசித் திருவிழா நேற்றுடன் முடிவடைந்தது.
இதற்கிடையே தடுப்பூசித் திருவிழாவை நடத்துமாறு மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக்கொண்டது.
அதன் அடிப்படையில் தமிழகத்தில் தடுப்பூசித் திருவிழா நடத்தி அதிகம் பேருக்குத் தடுப்பூசி போட தமிழக சுகாதாரத்துறை ஏற்பாடு செய்தது.
இதன்படி தமிழகத்தில் நேற்று முதல் 16ஆம் தேதி வரை மூன்று நாட்கள் தடுப்பூசித் திருவிழா நடக்கிறது. இதில் பொதுமக்கள் ஆர்வமாக பங்கேற்று தடுப்பூசி போட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் தற்போது தினமும் 1.63 லட்சம் பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில் இந்த எண்ணிக்கையை 2 லட்சமாக உயர்த்த சுகாதாரத்துறை திட்டமிட்டு இருக்கிறது.
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள், நகர்ப்புற மற்றும் கிராமப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் 1,900 சிறிய மருந்த கங்கள் மற்றும் தடுப்பூசி செலுத்த அனுமதி பெற்ற தனியார் மருத்துவ மனைகள் என 5,000க்கு மேற்பட்ட மையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
தடுப்பூசித் திருவிழா தொடர்பில் பேசிய சுகாதாரத்துறை அதிகாரிகள், தமிழகத்தில் இதுவரை 39 லட்சத்து 44 ஆயிரம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர். கொரோனா தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வை பொதுமக்கள் மத்தியில் வேகமாகக் கொண்டு செல்லும் முயற்சியாகவே இந்த தடுப்பூசித் திருவிழா நடக்கிறது என்று தெரிவித்தனர்.

