சென்னை: வேளச்சேரி தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி எண் 92ல் இம்மாதம் 17ஆம் தேதி மறு வாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை மறு வாக்குப்பதிவு நடைபெறும்.
தமிழகம் முழுவதும் இம்மாதம் 6ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.
இதில் வேளச்சேரி தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி எண் 92ல் வாக்குப்பதிவு முடிந்ததும் இரவு 7:30 மணிக்கு வாக்குச் சாவடியிலிருந்து மூன்று ஊழியர்கள் சேர்ந்து இரு வாக்குப் பதிவு இயந்திரங்கள், ஒரு கட்டுப்பாட்டு இயந்திரம் மற்றும் ஒரு விவிபேட் இயந்திரம் ஆகியவற்றை இரு சக்கர வாகனத்தில் வைத்து எடுத்துச் செல்ல முயற்சி செய்தனர்.
ஆனால் பொதுமக்கள் அவர் களைப் பிடித்து போலிசிடம் ஒப்படைத்தனர்.
இதையடுத்து தேர்தல் அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை நடத்தி மூவரையும் இடைக்கால பணிநீக்கம் செய்துள்ளனர்.
இது குறித்து விளக்கம் அளித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, "இரு சக்கர வாகனத்தில் விவிபேட் உள்ளிட்ட இயந்திரங்கள் கொண்டு சென்றது விதிமீறலாகும் என்றார்.
அந்த விவிபேட் இயந்திரத்தில் 15 வாக்குகள் பதிவாகியிருந்ததாகவும் அவர் சொன்னார்.
சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடியில் 200 வாக்குகள் இருக்கும் நிலையில் இந்த இயந்திரத்தில் 15 வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. இதனால் வாக்குப் பதிவு குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில் மறுவாக்குப் பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே கோவை மாவட்ட வாக்கு எண்ணும் மையமான தடாகம் சாலையில் உள்ள அரசினர் தொழில்நுட்பக் கல்லூரிக்குள் (ஜி.சி.டி.) நேற்று முன்தினம் இரவு நேரத்தில் இரண்டு கொள்கலன் லாரிகள் புகுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து திமுகவினருக்கு தகவல் பறந்தது.
உடனே நா.கார்த்திக் மயூரா ஜெயக்குமார், குறிச்சி பிரபாகரன், சண்முகசுந்தரம், கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஆறுமுகம் ஆகியோர் ஜி.சி.டி. கல்லூரிக்கு விரைந்து வந்தனர். அவர்கள் லாரிகளை சோதனையிட்டனர். அது, கொள் கலன் லாரி அல்ல, மகளிர் போலிசார் பயன்படுத்தும் நடமாடும் கழிவறை வாகனம் என்பது தெரிய வந்தது.
அப்போது, திமுக வேட்பாளர்கள் இரவு நேரத்தில் கழிவறை வாகனங்களைக் கொண்டு வர வேண்டிய அவசியம் என்ன என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து இரண்டு லாரிகளும் வாக்கு எண்ணும் மையத்திலிருந்து வெளியேற்றப்பட்டன.