கடலூர்: கடலூரைச் சேர்ந்த மூன்றாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள ஜெயக்குமார் (படம்) என்ற இைளஞர், மெல்லிய செம்புக் கம்பியைக் கொண்டு திருக்குறளை வடிவமைக்கும் ஒரு வித்தியாசமான முயற்சியில் இறங்கி உள்ளார்.
விரைவில் வள்ளுவரின் 1,330 குறள்களையும் செம்புக் கம்பியில் வடிவமைத்து கின்னஸ் சாதனை படைக்க உள்ளதாகவும் கூறியுள்ளார் ஜெயக்குமார்.
கடலூர் மாவட்டம், கூத்தப் பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார், தனது குழந்தைப் பருவம் முதலே சிறு கம்பிகளைக் கொண்டு தான் விரும்பிய வடிவங்களைச் செய்யும் பழக்கத்தை கைக்கொண்டு வந்துள்ளார்.
நாளடைவில் எளிதில் வளையும் தன்மை கொண்ட செம்புக் கம்பியைப் பயன்படுத்தி டாலர், கீ செயின், பெயர்கள் உள்ளிட்ட பல வடிவங்களைச் செய்து வந்துள்ளார்.
தனது வடிவமைப்பின் மீது அதீத ஆர்வம் கொண்ட ஜெயக்குமார், உலகப்பொதுமறையாம் திருக்குறளையும் செம்புக் கம்பியில் வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
இரண்டடி திருக்குறளை எந்தவித இணைப்பும் இன்றி ஒரே செம்புக் கம்பியில் வளைத்து வடிவமைக்கிறார். முதலடியின் நான்கு வார்த்தைகளும் இரண்டாம் அடியின் மூன்று வார்த்தைகளும் இணைந்தபடி கோர்வையாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

