சென்னை: நகைச்சுவை நடிகர் விவேக், திடீர் மாரடைப்பு காரண மாக சென்னையில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் நேற்று காலை அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தீவிரமாக கவனித்து வருகின்றனர்.
இச்செய்தியைச் கேட்டு கோலிவுட் முதல் உலகெங்கும் வாழும் மக்கள் பலரும் அதிர்ச்சி அடைந்தனர். விவேக் விரைவில் குணமாக வேண்டும் என அவரது ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
நேற்று முன்தினம்தான் சென்னை, ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார் விவேக்.
அப்போது, சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்.
தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு விவேக் பேசியபோது, "தடுப்பூசி குறித்த வதந்திகள் மக்களிடையே பரவி வருகின்றன. இந்த தடுப்பூசியைப் போட்டுக்கொள்வதால் நமக்கு எந்தவித ஆபத்தும் இல்லை. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே நான் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளேன்.
"முகக்கவசம், கைகளை அடிக்கடி கழுவுதல், தனிமனித இடை வெளி ஆகியவைதான் மக்களுக்கு சமூகப் பாதுகாப்பு.
"ஆனால், இந்த தடுப்பூசி மட்டும்தான் மருத்துவ ரீதியான ஒரேயொரு பாதுகாப்பு.
"இதுதான் உயிரைக் காப்பாற்றும் பாதுகாப்பு. இதைச் செலுத்திக்கொள்வதால் தொற்று வராது என்பதல்ல. வந்தாலும் உயிரிழப்பு என்பது இருக்காது. இருமுறை தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிறகு, இரு வாரங்கள் கழித்து நோய் எதிர்ப்புச் சக்தி நம் உடலில் உண்டாகும்," என்றார்.

