தஞ்சாவூர்: நாடெங்கிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா கிருமிப் பரவலைத் தடுக்கும் வகை யில் பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் அனைத்து நினைவிடங்களையும் அருங்காட்சியகங்களையும் மூடும்படி மத்திய தொல்லியல் துறை நேற்று முன்தினம் உத்தரவிட்டது.
மே 15ஆம் தேதி வரை இந்த நினைவுச் சின்னங்கள் மூடப்பட்டிருக்கும் என்றும் அடுத்த உத்தரவு வரும் வரை இது தொடரும் எனவும் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், தமிழகத்தில் இந்த தொல்லியல்துறையின் கட்டுப்பாட்டின்கீழ் இருக்கும் தஞ்சை பெரிய கோயில், மாமல்லபுரம் கடற் கரைக் கோவில் உள்ளிட்ட கோவில்களும் நினைவிடங்களும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் பெரிய கோயிலின் நான்கு நுழைவாயில்களும் தடுப்புகள் வைத்து மூடப்பட்டுள்ளதால் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
எனினும், கோயிலுக்குள் வழக்கமான பூஜைகள் நடைபெறும் என்றும் கோயில் பணியாளர்கள், சிவாச்சாரியர்களுக்கு மட்டுமே கோயிலுக்குள் அனுமதி அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரம் சுற்றுலாத் தலங்களும் மே மாதம் 15ஆம் தேதி வரை மூடப்படுவதாக தொல்லியல்துறை அறிவித்துள்ளது. அதன்படி கடற்கரை கோயில், ஐந்து ரதம், வெண்ணெய் உருண்டை உள்ளிட்ட அனைத்து இடங்களின் நுழைவாயில்களும் அடைக்கப்பட்டுள்ளன. பயணிகள் வருகை குறைந்ததால் மாமல்லபுர சுற்றுலாத்தலமே வெறிச்சோடிக் காணப்படுகிறது.

