செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
4406622f-33c1-4a3f-ae9e-b2f18316ce36
-

அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னை: சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போதும் தேர்தல் முடிந்த பிறகும் அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கொரோனா கிருமிப் பரவலால் பாதிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில், தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகமும் கிருமி பாதிப்பு காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

மீண்டும் பழையபடி பெரியார் ஈவெரா

சாலை என பெயர் மாற்றிய அதிகாரிகள்

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே வைக்கப்பட்டிருந்த பெயர் பலகையில், 'பெரியார் ஈ.வெ.ரா சாலை' என்ற வாசகம் 'கிராண்ட் வெஸ்டர்ன் டிரங் சாலை' என மாற்றப்பட்டிருந்தது.

"கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும் பெரியார் பெயரை எந்த அறிவிப்பும் இன்றி, யாருக்கும் தெரியாமல் மாற்றவேண்டிய தேவை அரசுக்கு எங்கிருந்து வந்தது?" என பல்வேறு தரப்பினரும் எதிர்த்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவோடு இரவாக அங்கு வந்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், பெயர் பலகையில் முன்பிருந்தது போலவே 'பெரியார் ஈ.வெ.ரா சாலை' என பெயரை திருத்திவிட்டுச் சென்றனர்.

பட்டாசு ஆலை விபத்தில் பெண் பலி

விருதுநகர்: சிவகாசி அருகே முதலிப்பட்டி கிராமத்தில் உள்ள பட்டாசு ஆலையில் நேற்று முன்தினம் நிகழ்ந்த வெடிவிபத்தில் காயமடைந்த நால்வர் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் ஆதிலட்சுமி என்பவர் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்த நிலையில், செந்தில், முத்துமாரி, சுந்தரபாண்டியனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

'இணையம் வழியாக மட்டுமே

வழக்கு விசாரணை நடைபெறும்'

சென்னை: கொரோனா பரவல் காரணமாக, சென்னை உயர்நீதிமன்றம், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று முதல் இணையம் மூலமாக மட்டுமே வழக்கு விசாரணை நடைபெறும் என தலைமைப் பதிவாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

முக்கிய வழக்குகள், பிணை கோரும் வழக்குகளில் மட்டும் அரசு வழக்கறிஞர்கள் நேரடியாக முன்னிலையாக வேண்டும் என்றும் மற்ற அனைத்து வழக்கு விசாரணையும் இணையம் வழி மட்டுமே நடைபெறும் எனவும் ஏப்ரல் 23ஆம் தேதி வரை இந்த நடைமுறை தொடரும் எனவும் தலைமைப் பதிவாளர் அறிவிப்பில் மேலும் தெரிவித்துள்ளார்.