மரணமே உனக்குச் சிரிக்கத் தெரியாது; அதனால்தான் சிரிப்பைத் திருடிவிட்டாய்: வைரமுத்து

மரணமே உனக்குச் சிரிக்கத் தெரியாது; அதனால்தான் சிரிப்பைத் திருடிவிட்டாய்: வைரமுத்து

2 mins read
861f68da-7dc2-454a-ae23-ba2d7ba2b737
கவிஞர் வைரமுத்து விவேக்கிற்கு அஞ்சலி செலுத்திவிட்டு தமது ஆழ்ந்த துக்கத்தை செய்தியாளர்களிடம் இன்று பகிர்ந்துகொண்டார். படம்: ஊடகம் -

நகைச்சுவை நடிகர் விவேக்கின் மறைவுக்கு திரையுலகத்தினர், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்தும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தியும் வருகின்றனர்.

இந்நிலையில் கவிஞர் வைரமுத்து விவேக்கிற்கு அஞ்சலி செலுத்திவிட்டு தமது ஆழ்ந்த துக்கத்தை செய்தியாளர்களிடம் இன்று பகிர்ந்துகொண்டார்.

அப்போது அவர், "ஒரு சீர்திருத்தக் கலைஞன் மறைந்துவிட்டான் என்று சொல்வதா? என்னைப் பொறுத்தவரையில், ஒரு நல்ல சகோதரனை இழந்துவிட்டேன். என் கவிதைகளின் கொள்கைப் பரப்புச் செயலாளரை நான் இழந்துவிட்டேன். தமிழ்த் திரை உலகம் நீண்டகாலமாக சேமித்துவைத்திருந்த செல்வத்தை இழந்துவிட்டது. நகைச்சுவை நடிகர்கள் வருவார்கள், இருக்கிறார்கள். அவர்களில், விவேக் தனித்தடம் பதித்தவர். கொள்கை, சீர்திருத்தம், பகுத்தறிவு ஆகியவை இருக்க வேண்டும் என்று கலையில் தம்மைச் செதுக்கிக்கொண்டவர்.

"இன்றைக்கு சாவின் விழியில் அவரது மரணம் நினைத்து பார்க்கப்படுவதற்கு காரணம், அவரது கலைச் சேவை மட்டுமல்ல; அதையும் தாண்டி அவரது சமூக அக்கறை. ஒரு கலைஞனுக்குத் தேவையான சமூக அக்கறையைத் தம் கலை வழியிலும் கலைக்கு வெளியிலும் அவர் பின்பற்றினார் என்பதுதான் விவேக்கின் தனிச்சிறப்பு. ரசிகர்கள் மட்டுமா துக்கம் அனுசரிக்கிறார்கள்? கலை உலகம் மட்டுமா துக்கம் அனுசரிக்கிறது? மனிதர்கள் மட்டுமா இன்று துக்கம் அனுசரிக்கிறார்கள்? இல்லை. விவேக் நட்ட மரங்களும் செடிகளும் மரக்கன்றுகளும் விவேக்கிற்காக கண்ணீர் சிந்துகின்றன எனச் சொல்ல வேண்டும்.

"நண்பர் விவேக் இவ்வளவு விரைவில், நம்மைவிட்டு போவார் என நான் நினைக்கவில்லை. 59 வயது என்பது இளமை கனிந்த வயது. இனிமேல்தான் ஒருவன் சேவை செய்ய வேண்டிய வயது. பக்குவப்பட்ட வயது. கலை புரிகிற வயது. சமூகத்தை அறிகிற வயது. இந்த வயதில், மரணம் அவரைப் பிரித்துக்கொண்டதில் எங்களுக்குச் சம்மதம் இல்லை.

"மரணமே உனக்குச் சிரிக்கத் தெரியாது. அதனால்தான் சிரிப்பைத் திருடிவிட்டாய். விவேக்கை கலைச் சரித்திரம் எப்படி எழுதும் என்று நான் நினைக்கிறேன், 'விவேக்' என்று பெயரைப் போட்டு, எதிர்கால கலைச் சரித்திரம், 'காமெடி கதாநாயகன்' எனக் கொண்டாடும். நீண்டகாலம் நினைக்கப்படுவார் என் அன்பு சகோதரர் விவேக்," என்று கவிஞர் வைரமுத்து உருக்கமாகக் கூறினார்.

அரசு மருத்துவமனையில் தாம் தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான காரணம் குறித்து நடிகர் விவேக் நேற்று முன்தினம்தான் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்திருந்தார்.

குறிப்புச் சொற்கள்