நடிகர் விவேக்குக்கு கௌரவம் அளிக்கும் விதமாக அவரது இறுதிச் சடங்கின்போது காவல்துறை மரியாதை அளிக்க முடிவு செய்த தமிழக அரசு தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கேட்டது. தேர்தல் ஆணையத்திடம் இருந்து அனுமதி அளிக்கப்பட்டதை அடுத்து அவரது உடல் காவல்துறை மரியாதையுடன் தகனம் செய்யப்படும் என அரசு அறிவித்துள்ளது.
மாரடைப்பு காரணமாக விவேக் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்களின் சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலமானார். அவருக்கு வயது 59.
தாம் இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர், பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதில் தயக்கம் காட்டுவதை அறிந்து தாம் தடுப்பூசி போடுவதை ஓர் இயக்கமாக மாற்றி சுகாதாரத்துறைச் செயலருடன் இணைந்து விழிப்புணர்வு பேட்டி அளித்திருந்தார் விவேக்.
விவேக்கின் மறைவுக்கு அரசு மரியாதை தரவேண்டும் என முடிவெடுக்கப்பட்டது. தேர்தல் நடைமுறை உள்ளதால் அரசு தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது என்பதால் அரசின் சார்பில் தேர்தல் ஆணையத்துக்கு வேண்டுகோள் வைக்கப்பட்டது. விவேக்குக்கு அரசு மரியாதையாக காவல்துறை மரியாதை செலுத்த அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
அரசின் கோரிக்கைக்கு தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளதைத் தொடர்ந்து, விவேக்கின் கலை மற்றும் சமூகச் சேவையை கௌரவிக்க அவரது உடல் காவல்துறை மரியாதையுடன் இந்திய நேரப்படி இன்று (ஏப்ரல் 17) மாலை தகனம் செய்யப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

