சென்னை: இந்தியாவில் நான்கு மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசத்துக்கு நடைபெறும் சட்ட மன்றத் தோ்தல்களில் இதுவரை இல்லாத அளவுக்கு ரூ. 1,001 கோடி மதிப்பிலான ரொக்கம், மதுபானம், நகைகள், இலவசப் பொருள்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளதாக தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இது, கடந்த 2016ல் பறிமுதலான ரூ.225.77 கோடி பணத்தைவிட நான்கு மடங்கு அதிகம் என்றும் ஆணையம் கூறியுள்ளது.
"தோ்தல் ஆணையத்தின் வர லாற்றில் இது ஒரு மைல்கல் என்றும் காவல்துறை, வருமான வரித்துறையினருடன் நடத்திய சோதனை யால்தான் இது சாத்தியமானது," எனவும் அது தெரிவித்துள்ளது.
தமிழகம், கேரளம், அசாம் ஆகிய மாநிலங்களிலும் யூனியன் பிரதேசமான புதுச்சேரியிலும் தோ்தலுக்கான வாக்குப்பதிவுகள் நடந்து முடிந்துவிட்டன.
மேற்குவங்க மாநிலத்தில் மட்டும் இன்னும் மூன்று கட்டத் தோ்தல்கள் எஞ்சியுள்ளன. வாக்கு கள் மே 2ல் எண்ணப்பட உள்ளன.
இந்நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து இந்தியத் தேர்தல் ஆணையத்தால் கைப்பற்றப்பட்ட பணம், இலவசப் பொருள்கள் குறித்த விவரங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் அறிக்கையாக வெளியிட்டுள்ளது.
அதன்படி, இதுவரை ஐந்து மாநிலங்கள் முழுவதும் மொத்தம் ரூ.1,001.4 கோடி மதிப்பிலான பணம், நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இந்தப் பட்டியலில் முன்னணியில் உள்ள தமிழகத்தில் ரு.446.28 கோடி மதிப்பிலான பணம், நகைகள், மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அதனைத்தொடர்ந்து, மேற்கு வங்கத்தில் ரூ.300.11 கோடியும் அசாமில் ரூ.122.35 கோடியும் கேர ளத்தில் ரூ.84.91 கோடியும் புதுச்சேரியில் ரூ.36.95 கோடியும் சிக்கியுள்ளதாக ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் சிலரின் வீடுகளிலும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய அதிரடிச் சோதனையில் கோடிக்கணக்கான பணம், நகைகள், மதுபானம் பாட்டில்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.
தமிழகத்தில் சிக்கிய ரூ.446.28 கோடியில் ரூ.236.69 கோடி வாக்காளா்களுக்கு விநியோகிக்கப்பட இருந்தது.
புதுவையில் ரூ.27.42 கோடிக்கு விலை உயா்ந்த பொருள்களாகவும் மேற்கு வங்கத்தில் ரூ.118.33 கோடிக்கு போதைப் பொருள்களாக வும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கேரளத்தில் ரூ.50.86 கோடிக்கு தங்க நகைகள் உள்ளிட்ட விலை உயா்ந்த பொருள்களும் அசாமில் 41.97 கோடிக்கு மதுபானங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

