சென்னை: தமிழகத்தில் பரவும் கொரோனா கிருமித்தொற்று உருமாறி உள்ளதா என்பது குறித்து நடத்தப்பட்ட பரிசோதனையில், கிருமித்தொற்றில் உருமாற்றம் ஏதுமில்லை என்பது தெரியவந்துள்ளதாக பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வ விநாயகம் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியபோது, "உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா கிருமி உருமாறியுள்ளது. தமிழகத்திலும் உருமாறியுள்ளதா என்பதைக் கண்டறிய 20 மாதிரிகளை பெங்களூரில் உள்ள 'இன்ஸ்டன்' என்ற நிறு வனத்திற்கு சோதனை செய்ய தமிழக சுகாதாரத் துறை அனுப்பி யது. அந்த மாதிரிகளில் எந்த ஓர் உருமாற்றமும் தென்படவில்லை. ஏற்கெனவே உள்ள கிருமியின் தன்மையே உள்ளது எனத் தெரியவந்துள்ளது.
"எந்தவொரு கிருமித்தொற்று இருந்தாலும் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பின்பற்றுதல் போன்ற வழிகாட்டி நெறிமுறைகளைப் பின்பற்றினால் மட்டுமே தொற்று பரவும் வேகத்தை குறைக்கமுடியும்," என்றார்.

