மாரடைப்பு காரணமாக நடிகர் விவேக் நேற்று முன்தினம் சென்னையின் வடபழனி மாவட்டத்தில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சுயநினைவு இழந்த நிலையில் இருந்த நடிகர் விவேக்கின் மூச்சை மீண்டும் கொண்டு வர 45 நிமிடங்கள் காலதாமதம் ஆனதாகவும் இறுதியில் அவரை தங்களால் காப்பாற்ற முடியவில்லை என சிம்ஸ் மருத்துவர் தெரிவித்ததாக இந்திய ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. நடிகர் விவேக் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது முதல் இறுதியில் உயிரிழந்தது வரை சிம்ஸ் மருத்துவமனையின் துணைத் தலைவர் மருத்துவர் ராஜு சிவசாமி தனியார் இணையதளம் ஒன்றுக்கு பேட்டி அளித்தபோது இவ்வாறு விவரித்தார்:
நேற்று முன் தினம் காலை நெஞ்சுவலி உணர்வதாக விவேக் தமது குடும்ப உறுப்பினர்களிடம் தெரிவித்தார் . இதையடுத்து விவேக் இந்திய நேரப்படி காலை 11 மணிக்கு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். சுயநினைவிழந்த நிலையில் வந்த விவேக்கிற்கு நாடித்துடிப்பும் மூச்சும் இல்லை என்று குறிப்பிட்ட டாக்டர் ராஜு, ரத்த அழுத்தத்தை மருத்துவமனையினரால் பதிவு செய்ய முடியவில்லை என்றும் குறிப்பிட்டார்.
தீவிர சிகிச்சை பிரிவுக்கு அழைத்து செல்லப்பட்ட விவேக்கிற்குப் பிராணவாயு கொடுத்து, கார்டியாக் மசாஜ் 30 முறை செய்யப்பட்டது. இதன் பலனாக மூச்சை மீண்டும் கொண்டு வருவதற்கு 45 நிமிடங்கள் ஆகிவிட்டது. பின்னர் அவரை கேத்லாபிற்கு கொண்டு சென்று ஆஞ்சியோ செய்யப்பட்டபோது அவருக்கு 100 விழுக்காடு இதயத்தில் அடைப்பு இருப்பதை மருத்துவர்கள் அறிந்தனர். இதையடுத்து அவரது இதயத்தை இயங்க வைக்க எக்மோ கருவி பொருத்தி அடைப்பை சரி செய்தோம்.
எக்மோ கருவியின் உதவி இல்லாமல் அவரது இதயத்தை இயங்க வைக்க தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து சிகிச்சை அளித்தபோது அது தோல்வியில் முடிந்ததாக டாக்டர் ராஜு கூறினார்.

