சென்னை: தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு சிறுவர்களையும் விட்டுவைக்கவில்லை. அண்மைய நாட்களாக ஒவ்வொரு நாளும் நூற்றுக்கு மேற்பட்ட சிறுவர்களை கிருமி தொற்றி வருகிறது.
கடந்த ஆண்டு பரவிய கொரோனா கிருமி சிறுவர்களை அதிகளவில் பாதிக்கவில்லை. இந்த நிலையில் தற்போது 2வது அலையாக வேகமாகப் பரவும் கிருமித்தொற்று 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களை அதிகளவில் பாதிப்புக்குள்ளாக்கி முடக்கி உள்ளது. கடந்த பத்து நாட்களில் 12 வயதுக்குட்பட்ட 2,000 சிறுவர், சிறுமிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஏப்ரல் 8ஆம் தேதி 132 சிறுவர்கள் ஒரேநாளில் பாதிக்கப்பட்ட நிலையில் மறுநாள் அது 161ஆக அதிகரித்தது. ஏப்ரல் 10ஆம் தேதி 183 பேரும் 11ஆம் தேதி 203 பேரும் 12ஆம் தேதி 250 பேரும் பாதிக்கப்பட்டனர். அடுத்தடுத்த நாட்களில் இந்த பாதிப்பு மேலும் அதிகரித்தது. ஏப்ரல் 13ஆம் தேதியன்று 225 சிறுவர்கள் பாதிக்கப்பட்ட நிலையில் ஏப்ரல் 14ஆம் தேதி 288 பேர் பாதிக்கப்பட்டனர்.
இப்படி படிப்படியாக உயர்ந்துகொண்டே சென்ற சிறுவர்களின் கொரோனா பாதிப்பு ஏப்ரல் 15ஆம் தேதி கொஞ்சம் குறைந்தது. அன்றைய தினம் 256 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். அதற்கு மறுநாள் ஏப்ரல் 16ஆம் தேதியன்று 310 பேரும் ஏப்ரல் 17 அன்று 319 பேரும் பாதிக்கப்பட்டனர்.
சிறுவர்களை அதிகளவில் கொரோனா தொற்று பாதிக்காது என்று சுகாதாரத்துறையினர் கூறி இருந்த நிலையில் கடந்த 10 நாட்களில் அதிகளவில் சிறுவர்கள் பாதிக்கப்பட்டு இருப்பது சுகாதாரத் துறையினரையும் பெற்றோர்களையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் வெளியில் செல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என கூறும் மருத்துவர்கள் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும் என அறிவுறுத்துகின்றனர்.
தமிழகம் முழுவதும் கடந்த பத்து நாட்களில் அன்றாட கொரோனா பாதிப்பு படிப்படியாக அதிகரித்து தற்போது இருமடங்காக அதிகரித்துள்ளது. ஏப்ரல் 8ஆம் தேதியன்று 4,276 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர்.
இது படிப்படியாக உயர்ந்து ஏப்ரல் 11ஆம் தேதியன்று 6 ஆயிரத்தைக் கடந்தது. 14ஆம் தேதி 7,000ஐ கடந்து 8,000ஐ எட்டி இருந்தது. ஏப்ரல் 16ஆம் தேதியன்று 8,443 பேரும் ஏப்ரல் 17ஆம் தேதியன்று 8,344 பேரும் பாதிக்கப்பட்டனர். ஆகக்கடைசியாக ஒரேநாளில் 9,344ஆக உயர்ந்துவிட்டது.

