சென்னை: கொரோனா பரவல் அதிகரித்து வருவதையடுத்து மெரினா கடற்கரைக்குச் செல்ல வார இறுதி நாட்களில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு கடந்த வாரம் வெளியிட்ட அறிவிப்பில், மெரினாவுக்கு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பொது மக்கள் செல்வதற்கு தடை விதிக்கப்படுவதாக கூறப்பட்டு இருந்தது.
இதனைத் தொடர்ந்து கடந்த வாரம் வார இறுதி நாட்களில் மெரினா கடற்கரைக்கு மக்கள் அனுமதிக்கப்படவில்லை.
இதனால் மெரினா வெறிச்சோடி காணப்பட்டது. இந்த நிலையில் 2வது வாரமாக நேற்றும் நேற்று முன்தினமும் மெரினாவுக்குச் செல்ல பொதுமக்களுக்குத் தடை விதிக்கப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமைகளில் மெரினா கடற்கரை காலையிலேயே களைகட்டிவிடும். நடைப்பயிற்சி செல்பவர்கள் அதிக அளவில் காணப்படுவார்கள். விடுமுறை நாள் என்பதால் குடும்பத்தோடு பலரும் மெரினாவுக்கு வந்து பொழுதைப் போக்குவார்கள். ஆனால் நேற்று கொரோனா தடை காரணமாக மெரினா கடற்கரை ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.
மெரினா கடற்கரையில் பிரதான சாலையான காமராஜர் சாலையில் நடந்து செல்ல மக்கள் அனுமதிக்கப்பட்டனர். கடற்கரை சாலைக்குச் செல்ல யாருக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை.
அங்கு செல்லமுடியாத அளவுக்கு சாலைக்குச் செல்லும் வழிகள் மூடப்பட்டு இருந்தன. கடற்
கரைக்கு யாரும் சென்றுவிடாத வகையில் போலிசாரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

