ஈரோடு: சிறுமிக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞனுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஈரோடு மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் பகுதியைச் சேர்ந்த இளையர் ஜெகன், 19. பத்தாவது படித்து விட்டு ஊர் சுற்றி வந்த ஜெகன், 2019 பிப்ரவரி மாதம் தனது வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த நான்கு வயது சிறுமியை விளையாட்டுப் பொருட்களைக் காட்டி வீட்டிற்குள் அழைத்துச் சென்று பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார்.
வீட்டிற்குச் சென்ற சிறுமி நடந்ததை தனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.
அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், ஜெகன் மீது சத்தியமங்கலம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில் போக்சோ சட்டத்தின்கீழ் இளையர் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கு மீதான விசாராணை ஈரோடு மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிந்த நிலையில் சனிக்கிழமை தீர்ப்பு வழப்பட்டது.
நான்கு வயது சிறுமிக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றத்திற்காக ஜெகனுக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தும் 5,000 ரூபாய் அபராதம் விதித்தும் நீதிபதி மாலதி தீர்ப்பு வழங்கினார்.
ஜெகன் அபராதத் தொகையைக் கட்டத் தவறினால் மேலும் மூன்று மாதம் சிறைத் தண்டனை அனுபவிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பாலியல் தொந்தரவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து ஒரு லட்சம் ரூபாய் வழங்க வேண்டுமெனவும் தமிழக அரசுக்கு நீதிபதி பரிந்துரை செய்தார்.
தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னர் கோவை மத்திய சிறைச்சாலைக்கு ஜெகனை போலிசார் அழைத்துச் சென்றனர்.

