அடுக்குமாடி குடியிருப்பில் 12 பேருக்கு தொற்று; அனைவருக்கும் பரிசோதனை
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் அருகே தனியார் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசிக்கும் 12 பேர் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியானது. பாதிக்கப்பட்டவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து, அந்தப் பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, அப்பகுதி முழுவதும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டது.
அங்கு வசிப்போர் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
விஜயபாஸ்கர்: தடுப்பூசிகள் ேபாதுமான அளவில் இருப்பு உள்ளன
சென்னை: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசிகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாகக் கூறப்படும் தகவல்களை நம்பவேண்டாம் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழகத்துக்கு இதுவரை 55.8 லட்சம் 'டோஸ்' தடுப்பூசி களை மத்திய அரசு அனுப்பியுள்ளது. அதில், 47.05 லட்சம் 'டோஸ்' தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு உள்ளன. எஞ்சிய 8.8 லட்சம் 'டோஸ்' தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன.
தடுப்பூசி இருப்பில் இல்லாமல் மக்கள் அலைக்கழிக்கப் படுவதாகப் பரவும் தகவல்களையும் நம்பவேண்டாம் என அமைச்சர் தனது 'டுவிட்டர்' பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சீமான்: விவேக் மரணத்திற்கு தடுப்பூசி முழு காரணமல்ல
சென்னை: நடிகர் விவேக் கொரோனா தடுப்பூசியைப் போட்டுக் கொண்டதால்தான் உயிரிழந்தார் என மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் "நான் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை. ஆனால் நான் விசாரித்தவரை நடிகர் விவேக்கிற்கு மாரடைப்பு பிரச்சினை ஏற்கெனவே இருந்துள்ளது. ஒருவேளை ஊசி போட்டதால் கூடுதலாக வந்திருக்கலாமே தவிர தடுப்பூசி முழு காரணமல்ல," என கருத்து தெரிவித்துள்ளார்.
முதல்வர் மருத்துவமனையில் அனுமதி
சென்னை: குடல் இறக்க அறுவை சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவனையில் தமிழக முதல்வர் கே. பழனிசாமி அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த அறுவை கிசிச்சைக்கு முன்பாக செய்யப்பட்ட கொரோனா பரிசோதனையில், அவருக்கு தொற்று பாதிப்பு இல்லை என்பது உறுதியானது.
மதுக்கடையை உடைத்து ரூ.40,000 மதிப்புள்ள மது போத்தல்கள் திருட்டு
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், பனங்குடி கிராமத்தில் அமைந்துள்ள மதுக்கடையில் நள்ளிரவு நேரத்தில் இரும்புக் கம்பிகளால் பூட்டை உடைத்து ரூ.40,000 மதிப்புள்ள மதுபோத்தல்களைத் திருடிச் சென்றுள்ளனர். நேற்று காலை கடையை டாஸ்மாக் ஊழியர்கள் திறக்க வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து போலிசாருக்குத் தகவல் கொடுத்தனர்.

