தேனி: தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்த இரண்டு முதியவர்களின் உடல்கள் உறவினர்களிடம் மாற்றிக் கொடுக்கப்பட்டுள்ள சம்பவம் நடந்துள்ளது. அதில் ஒருவரது உடலை அவசர அவசரமாக எரியூட்டிவிட்ட நிலையில், கலங்கி நின்ற உறவினர்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர்.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் அய்யாவு, 71. இவர், கடந்த 16ஆம் தேதி, வத்தலக்குண்டு பேருந்து நிலையத்தில் உடல்நிலை சரியில்லாமல் மயங்கி விழுந்தார். பின்னர், அவரை தேனியில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில், அவர் நேற்று முன்தினம் இறந்தார். உறவினர்கள் உடலை கேட்கச் சென்றபோது அய்யாவுவின் உடல் அங்கு இல்லை. விசாரணையில் பெரியகுளம் அருகே இறந்துபோன ராமுவின், 75, உடலுக்கு பதில் அவரது உறவினர்களிடம் அய்யாவுவின் உடலைக் கொடுத்ததும் அவர்கள் இறுதிச் சடங்கு செய்து எரித்ததும் தெரியவந்தது.

