தூத்துக்குடி: பிரேசில் நாட்டில் இருந்து தூத்துக்குடியைச் சேர்ந்த ஒரு நிறுவனத்திற்கு இறக்குமதியான மரக்கட்டைகள் வந்த ஒரு கப்பலில் ரூ.1,500 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் சிக்கியதை அடுத்து அதிகாரிகள் பல கோணங்களில் விசாரணையை முடுக்கிவிட்டு உள்ளதாக தமிழக ஊடகம் தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் வழி போதைப்பொருள் கடத்தப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது என்றும் அதையடுத்து அதிகாரிகள் தூத்துக்குடிக்கு வரும் சரக்குப் பெட்டகங்களைத் தீவிரமாக கண்காணித்து வந்ததாகவும் மாலைமலர் செய்தித்தாள் குறிப்பிட்டது.
பிரேசிலில் இருந்து தூத்துக்குடியைச் சேர்ந்த ஒரு நிறுவனத்திற்கு இறக்குமதியாக இருந்த மரக்கட்டைகள் கொள்கலன்களில் ஏற்றப்பட்டு பனாமா நாட்டுக்கு அனுப்பப்பட்டன. அங்கிருந்து புறப்பட்ட ஒரு கப்பல், மரக்கட்டைகள் வைக்கப்பட்டிருந்த எட்டு கொள்கலன்களுடன் இலங்கை வழியாக செவ்வாய் அதிகாலை நேரத்தில் தூத்துக்குடிக்கு வந்தது. கப்பலில் 24 சிப்பந்திகள் இருந்தனர்.
அதிகாரிகளுக்குச் சந்தேகம் ஏற்பட்டதால் கொள்கலன்களைச் சோதனையிட்டனர். அவற்றில் ஒரு கொள்கலனில் மரக்கட்டைகளுக்கு இடையில் கறுப்பு நிறத்தில் 28 சிறிய மூட்டைகள் இருந்தன.
அவற்றில் கொக்கைன் உள்ளிட்ட சுமார் 300 கிலோ எடை கொண்ட போதைப்பொருட்கள் இருந்ததைக் கண்டு அதிகாரிகள் அவற்றைப் பறிமுதல் செய்தனர்.
அனைத்துலக அளவில் அந்த போதைப்பொருட்களின் மதிப்பு ரூ.1,500 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக போதைப்பொருள்கள் கடத்தப்பட்டு வருவதாகவும் இது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருவதாகவும் தெரிய வந்துள்ளது.
இந்தச் சூழலில் இப்போது அதிக அளவில் போதைப்பொருள் சிக்கி இருப்பதால் அதிகாரிகள் பல கோணங்களில் விசாரணை நடத்தி வருவதாக அந்தச் செய்தித்தாள் தெரிவித்துள்ளது.

