கூத்தாண்டவர் கோவில் விழா இந்த ஆண்டும் இல்லை
புதுச்சேரி: தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கூவாகம் போல் புதுச்சேரி பிள்ளையார்குப்பம் கிராமத்தில் பிரபலமான கூத்தாண்டவர் கோயில் உள்ளது.
கொவிட்-19 பரவலைத் தடுக்கும் விதமாக கடந்த ஆண்டு அங்கு கூத்தாண்டவர் கோயில் திருவிழா ரத்து செய்யப்பட்டது. கொரோனா 2ஆம் அலை காரணமாக கூத்தாண்டவர் திருவிழாவைக் கோயில் நிர்வாகம் இந்த ஆண்டும் ரத்து செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவித்தன.
அமராவதி திறப்பும் மகிழ்ச்சியும்
உடுமலை: திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள அமராவதி அணையின் நீர் மட்டம் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக 85 அடியில் நீடித்து வருகிறது.
கடந்த ஆண்டில் தென்மேற்குப் பருவமழையும் இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழையும் கைகொடுத்ததே இதற்குக் காரணம். நீர் அதிகம் இருப்பதால் 10 நாட்களுக்கு அமராவதி ஆறு மற்றும் பிரதான கால்வாய் மூலமாக தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
இதனால் ஏறத்தாழ 50,000 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும் என்பதோடு குடிநீர் திட்டங்களுக்கும் நீர்வரத்து கிடைத்துள்ளதால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அர்ஜூன் கல்யாண்-இந்தியாவின் 68வது 'சதுரங்க மன்னன்'
சென்னை: செர்பியாவில் ஏப்ரல் 17 முதல் 23 வரை நடந்துவரும் சதுரங்கப் போட்டியில் சென்னையைச் சேர்ந்த அர்ஜூன் கல்யாண் என்ற இந்த 18 வயது சிறுவன், வென்று சாதனை படைத்ததை அடுத்து இவருக்கு சதுரங்க மன்னன் (கிராண்ட் மாஸ்டர்) என்ற ஆக உயரிய பட்டத்தை அனைத்துலக சதுரங்கக் கூட்டமைப்பு இம்மாதம் 20ஆம் தேதி வழங்கியது. கொவிட்-19 சூழலிலும் துணிச்சலாக அங்கு சென்று இந்தச் சாதனையை நிகழ்த்தி இருக்கும் அர்ஜூன் கல்யாண் இந்தியாவின் 68வது சதுரங்க மன்னனாக ஆகி இருப்பதாக ஊடகங்கள் தெரிவித்தன.கொவிட்-19 போலி சான்றிதழ்
தயாரித்து கொடுத்தவர் கைது
உடுமலை: கிருஷ்ணகிரி பர்கூர் பகுதியில் கருங்கல் வெட்டி எடுக்கப்படும் இடங்களில் அதிகளவில் வடமாநிலத்தவர்கள் வேலை செய்து வருகின்றனர். அவர்கள் ரயிலில் பயணம் செய்ய கொரோனா இல்லை என்ற சான்றிதழ் அவசியம்.
இந்நிலையில், போலியான அரசு மருத்துவரின் கையெழுத்து, அரசு மருத்துவமனை முத்திரை போன்ற வற்றுடன் கிருமித்தொற்று இல்லை என்று தெரிவிக்கும் போலி சான்றிதழ்களைத் தயாரித்து அவர்களுக்குக் கொடுத்து வந்த தினேஷ், 29, என்பவரை போலிஸ் கைது செய்தது. தினேஷ் பர்கூர்-திருப்பத்தூர் சாலையில் ரயில், விமானப் பயண இணைய முன்பதிவு அலுவலகத்தை நடத்தி வருகிறார்.
கைபேசிகள் ஒப்படைப்பு
சென்னை: சென்னையில் அண்மைய மாதங்களில் தனியாக நடந்து சென்ற பொதுமக்களிடம் கைபேசிகளைப் பறித்துச் சென்ற பல கொள்ளையர்களைக் கைது செய்த தனிப்படை போலிஸ் அதிகாரிகள் கொள்ளையர்களிடம் இருந்து 1,382 கைபேசிகளைக் கைப்பற்றினர். சென்னையில் போலிஸ் ஆணையர் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை அவை உரிய வர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக ஊடகங்கள் கூறின.
மூன்று காட்சிகள் நடத்த முடிவு
சென்னை: தமிழ்நாட்டில் திரையரங்குகளில் நாள்தோறும் மூன்று காட்சிகளைத் திரையிடுவது என திரையரங்கு உரிமையாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப் பட்டது. ஏப்ரல் 10 முதல் திரையரங்குகளில் 50% இருக்கைக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது. இரவு 9.30 மணிக்குள் திரையரங்குகள் மூடப்படும். ஞாயிறு நாட்களில் திரையரங்குகள் இயங்காது.

