எழுவர் மரணம் குறித்து பதிலளிக்க மனித உரிமை ஆணையம் உத்தரவு
சென்னை: வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் ஆக்சிஜன் குழாயில் ஏற்பட்ட பழுது காரணமாக, கொேரானா வார்டில் சிகிச்சை பெற்று வந்த நான்கு நோயாளிகள் உள்பட ஏழு பேர் இரு தினங்களுக்கு முன்பு உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக இரண்டு வாரங்களுக்குள் விரிவாக விளக்கம் அளிக்கும்படி தமிழக மருத்துவக் கல்வி இயக்குநருக்கு மாநில மனித உரிமை ஆணைய நீதிபதி துரை ஜெயச்சந்திரன் உத்தர விட்டுள்ளதாக நியூஸ் 7 தமிழ் ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
ஆக்சிஜன் தடைபட்டதால் எழுவர் மரணம் அடைந்த சம்பவம் தொடர்பாக ஊடகங்களில் வெளியான செய்தி களின் அடிப்படையில் மாநில மனித உரிமை ஆணையம் தானாக முன்வந்து விசாரணையை மேற்கொண்டுள்ளது.
எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம்
சென்னை: கொரோனா பரவாமல் தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், தலைமைச் செயலக ஊழியர்கள், பார்வையாளர்கள் பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் எனவும் அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து பொதுத்துறை முதன்மைச் செயலாளர் செந்தில்குமார் வெளியிட்டுள்ள உத்தரவில், "தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டத்தின்படி முகக்கவசம் அணியாமல் இருப்பது, பொது இடங்களில் எச்சில் துப்புவது ஆகியவை தவறான பழக்கவழக்கமாகும். இவை தண்டனைக்குரிய குற்றமாகும். பொது இடங்களில் அபராதம் விதிக்கப்படுவது போல் இனி தலைமைச் செயலகத்திலும் அபராதம் விதிக்கப்படும். சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் செல்பவர்களுக்கு ரூ.500 அபராதமும் முகக்கவசம் அணியாமல் செல்பவர் களுக்கு ரூ.200 அபராதமும் எச்சில் துப்புபவர்களுக்கு ரூ.500 அபராதமும் விதிக்கப்படும்," என்று கூறியுள்ளார்.

