சென்னை: இரவு நேர ஊரடங்கின் காரணமாக போக்குவரத்துக் கழகங்களுக்கு சராசரியாக ஒரு நாளைக்கு ரூ.12 கோடி முதல் ரூ.15 கோடி வரை இழப்பு ஏற்பட்டு வருவதாக தமிழக போக்குவரத்து துறைச் செயலாளர் சி.சமயமூர்த்தி கூறியுள்ளார்.
தமிழகத்தில் மீண்டும் கிருமிப் பரவல் அதிகரிக்கத் தொடங்கி உள்ளதை அடுத்து, கடந்த 20ஆம் தேதி இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது.
இதன் காரணமாக, போக்கு வரத்துக் கழகங்களுக்கு அன்றாடம் ஏற்படும் இழப்பு, தடுப்பூசி செலுத்திக்கொள்வோரின் எண்ணிக்கை விவரம், போக்குவரத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து சி.சமயமூர்த்தி நியூஸ் 18 ஊடகத்துக்கு விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை மாநகரப் போக்கு வரத்துக் கழகத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கு பல்லவன் சாலையில் நேற்று தடுப்பூசி போடும் பணி தொடர்ந்தது.
இந்தப்பணியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, "தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் கீழ் மாநிலம் முழுவதும் பணிபுரியும் 45 வயதைக் கடந்த அனைத்து ஓட்டுநர், நடத்துநர், தொழில்நுட்பப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
"ஓட்டுநர், நடத்துநருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டால் பேருந்தில் பயணிக்கும் மற்ற பயணிகளுக்கும் பரவ வாய்ப்புள்ளது.
"தமிழகத்தில் 70,000க்கும் மேற்பட்ட 45 வயதைக் கடந்த ஓட்டுநர், நடத்துநர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களில் 25,459 பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டு ஏறக்குறைய 37%ஐ எட்டியுள்ளோம்.
"தடுப்பூசி போடும் பணியை படிப்படியாகத் தீவிரப்படுத்தி வருகிறோம். ஒன்று அல்லது இரண்டு வாரத்தில் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டுவிடும்.
"இரவுநேர ஊரடங்கால் பேருந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக போக்குவரத்துக் கழகங்களுக்கு ரூ.15 கோடி வரை இழப்பு ஏற்பட்டு வருகிறது," என்று கூறியுள்ளார்.

