புதுச்சேரி: கொரோனா கிருமித் தொற்று மக்கள் மத்தியில் பரவாமல் தடுக்கும் வகையில், புதுச்சேரியில் ஒரு ரூபாய்க்கு முகக்கவசம் விற்பனை செய்யும் திட்டத்தை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தொடங்கி வைத்தார்.
புதுவை அரசின் பான்லே விற்பனையகங்கள் வாயிலாக ஒரு ரூபாய்க்கு முகக்கவசமும் கைகளைச் சுத்தமாக ைவத்திருக்கப் பயன்படுத்தும் கிருமிநாசினி திரவம் 10 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுவதாக தமிழகச் செய்திகள் தெரிவித்துள்ளன.
இத்திட்டத்தின் வழி ஏழை எளிய மக்கள் அதிகம் பயனடைவர் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இதேபோல் ஒரு ரூபாய்க்கு முகக்கவசங்களை விற்பனை செய்யும் திட்டத்தை தமிழக அரசும் தொடங்கவேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், முகக்கவசம் அணிவது குறித்து துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறுகையில் "முகக்கவசம் அணி வதை புதுவை மக்கள் கட்டாயம் பின்பற்றவேண்டும்.
"இதன்வழி, கிருமித்தொற்று வாய், மூக்கு வழியாக உள்ளே செல்வதற்கு வழியில்லை. அதேபோல் கொரோனா பாதிப்பு இருந்தாலும் முகக்கவசம் அணிந்து இருந்தால் கிருமி பாதிப்பு வெளியே பரவாது. எனவே, கிருமிப் பரவலை முழுமையாகக் கட்டுப்படுத்த முகக் கவசம் அணிவது ஒன்றே இப்போதைக்கு சிறந்த வழியாக உள்ளது. முகக்கவசம் அணிவது முக்கியம் என்பதால்தான் ஒரு ரூபாய்க்கு முகக்கவசத்தை விற்பனை செய்ய ஏற்பாடு செய்துள்ளோம்," என்று கூறினார். புதுச்சேரியில் உள்ள 70 பான்லே விற்பனையகங்களில் முகக்கவசம் 1 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

