சென்னை: தமிழகத்தில் ஆக்சிஜன், வெண்டிலேட்டா், ரெம்டெசிவா் ஆகியவற்றிற்கு இதுவரை பற்றாக்குறை எதுவும் ஏற்பட வில்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
ஆக்சிஜன் உற்பத்தி தேவைக்கும் கூடுதலாக இருப்பதால் ஆந்திரா, தெலுங்கானாவுக்கு வழங்கப்பட்டதாகவும் அரசு மேலும் கூறியுள்ளது.
ரெம்டெசிவர் மருந்துகள் தனி நபர்களுக்கு வழங்கப்படுவதாகவும் தமிழக அரசின் அனுமதியைப் பெறாமல் வெளிமாநிலங்களுக்கு ஆக்சிஜன் அனுப்பப்படுவதாகவும் வெண்டிலேட்டர் பற்றாக்குறை உள்ளதாகவும் நாளிதழ்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தாமாக முன்வந்து பொது நல வழக்காக விசாரித்தது.
இதற்கு, அரசு அளித்துள்ள விளக்கத்தில், "மாநிலத்தில் ஆக்சி ஜனுக்கு தட்டுப்பாடு இல்லை. தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 400 மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில், தினமும் 250 மெட்ரிக் டன் ஆக்சிஜன் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது.
"ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களுக்கு 65 மெட்ரிக் டன் ஆக்சிஜன் வழங்கியதால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை.
"தனியார் மருத்துவமனைகளில் ரெம்டெசிவிர் மருந்து கையிருப்பு இல்லை என்றால் அரசிடம் பணம் செலுத்திப் பெற்றுக்கொள்ளலாம்,
"அரசு மருத்துவமனைகளில் உள்ள 9,600 வெண்டிலேட்டர்களில் 5,887 வெண்டிலேட்டர்கள் மட்டுமே சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்டுள் ளன," என்று அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தது.
வழக்கு விசாரணை மீண்டும் நாளை மறுநாள் 26ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

