தூத்துக்குடி: தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கவிட மாட்டோம் என்று கூறி பொதுமக்கள் தங்க ளின் எதிர்ப்பை நேற்று பதிவு செய்தனர்.
"வேதாந்தா என்ற கொரோனா எங்கள் தலைமுறையையே அழித்து விடும். ஆக்சிஜன் தட்டுப்பாட்டை காரணம் காட்டி ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பதற்கு நாங்கள் அனுமதிக்க மாட்டோம்," என்று இந்த ஆலை திறப்பை எதிர்ப்பவர்கள் கூறினர்.
ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டும் மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கலாம் என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் சம்மதம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜின் தலைமையில், ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்கலாமா என்பது குறித்து தூத்துக்குடி மக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் நேற்று நடத்தப்பட்டது.
பொதுமக்களில் சிலர் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதிக்கலாம் என்று கூறினாலும் போராட்டக்குழுவினர் அதை திறக்க அனுமதிக்கக் கூடாது என கடும் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்ததாகவும் 'ஸீ நியூஸ்' ஊடகத் தகவல் தெரிவித்திருந்தது.
சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது என்றும் அந்தப் பகுதி மக்கள் தற்போதுதான் நிம்மதியாக வாழ்கின்றனர் என்றும் இதன் காரணமாக ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்கக் கூடாது என்றும் போராட்டக்குழுவினர் கூறினர்.
வேதாந்தா நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், "தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள ஆக்ஸிஜன் உற்பத்திக் கூடத்தில் நாள் ஒன்றுக்கு 500 டன் ஆக்ஸிஜன் தயாரிக்க முடியும். அதை தயாரித்து இலவசமாக வழங்க அனுமதிக்க வேண்டும்," எனக் குறிப்பிட்டிருந்தது.
இந்த மனு 23ஆம் ேததியான நேற்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த அதே சமயத்தில் தூத்துக்குடியில் கருத்துக் கேட்புக் கூட்டம் நடந்தது.

