செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
4aa86c92-fb79-4d4d-8276-5d4ed36573d5
-

இரண்டு லட்சம் கொவிஷீல்ட் மருந்துகள் தமிழகம் வருகை

சென்னை: மாநிலம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலையால் அதிகமான மக்கள் பாதிப்புக்கு ஆளாகி வரும் நிலையில், புனேவில் இருந்து தமிழகத்திற்கு மேலும் இரண்டு லட்சம் கொவிஷீல்ட் கொரோனா தடுப்பூசி மருந்துகள் வரவுள்ளதாக தகவல்கள் தெரிவித்தன. தமிழக அரசு கேட்டுக்கொண்டதற்கு இணங்க, கடந்த 20ஆம் தேதி தான் ஆறு லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் புனேவில் இருந்து தமிழகம் வந்தன.

20 லட்சம் தடுப்பூசிகள் தேவை: பிரதமருக்கு முதல்வர் கடிதம்

சென்னை: கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவுவதாக தமிழக மக்கள் புகார்கள் கூறுவதாக ஊடகச் செய்திகள் தெரிவித்து வரும் நிலையில், 20 லட்சம் தடுப்பூசிகளை உடனடியாக வழங்கக் கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

தமிழகத்திற்கு வழங்கவேண்டிய தடுப்பூசிகளில் முன்கூட்டியே 20 லட்சம் தடுப்பூசிகளை அவசரமாக வழங்கும்படி பிரதமரிடம் கேட்டுக்கொண்டுள்ள முதல்வர், தமிழகம் முழுவதும் நாள் ஒன்றுக்கு இரண்டு லட்சம் தடுப்பூசி வீதம் 10 நாள்களுக்கு தடுப்பூசி போடத் திட்டமிட்டுள்ளதால் தடுப்பூசிகளை விரைவாக வழங்கும்படி கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை ஆணையர்: கிருமி பாதிப்பு மே மாதம் அதிகரிக்கும்

சென்னை: தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்து வருகிறது. மே மாதத்தில் இந்த பாதிப்பு இன்னும் அதிகமாக பரவ வாய்ப்புள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

"மார்ச், ஏப்ரல் மாதங்களைக் காட்டிலும் மே மாதத்தில் கிருமி பாதிப்பு புதிய உச்சத்தைத் தொடும் என மருத்துவ நிபுணர்கள் கணித்துள்ளனர். மக்கள் முகக்கவசம் அணிவது, தனி மனித இடைவெளியைக் கடைப்பிடிப்பது போன்றவற்றை பின்பற்றுவது முக்கியம். குறைந்த அளவில் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ளலாம். மருத்துவமனைக்கு வரத் தேவையில்லை," என்று அவர் கூறியுள்ளார்.

காங்கிரஸ் தலைவருக்கு சிகிச்சை

சென்னை: முன்னாள் மத்திய அமைச்சரும் தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கிருமி பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதையடுத்து, சென்னையில் உள்ள மியாட் மருத்துவ மனையில் அவர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஏற்கெனவே இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், அவர் விரைவில் நலம்பெற வேண்டும் என தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

ஐந்து மாவட்டங்களில் அதிக பாதிப்பு

சென்னை: தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோவை ஆகிய இந்த ஐந்து மாவட்டங்களில் மட்டும் கொரோனா பாதிப்பும் உயிரிழப்பும் அதிகளவில் பதிவாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவரை ஏறக்குறைய ஆறு லட்சம் பேர் இந்த ஐந்து மாவட்டங்களிலும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். இதனால் இந்த ஐந்து மாவட்டங்களிலும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.