திருநெல்வேலி: பாளையங்கோட்டை மத்திய சிறையில் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் முத்து மனோ, 27, என்ற கைதி கல்லால் அடித்து படுகொலை செய்யப்பட்டார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக ஆறு போலிசாரை அதிரடியாக பணியிடை நீக்கம் செய்து டிஐஜி பழனி உத்தரவிட்டு உள்ளதாக ஒன் இந்தியா ஊடகச் செய்தி குறிப்பிட்டுள்ளது.
பாளையங்கோட்டை மத்திய சிறையின் துணை அதிகாரி சிவன், உதவி அதிகாரிகள் கங்காதரன், சங்கர சுப்பு, ஆனந்தராஜ், தலைமை வார்டன் வடிவேல் முருகையா, சிறைக்காவலர் சாம் ஆல்பர்ட் ஆகிய ஆறு பேரிடமும் விசாரணை நடத்தி மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
விசாரணைக் கைதியான வாகைக் குளத்தைச் சேர்ந்த முத்து மனோவின் உயிரிழப்புக்கு காரண மாக இருந்தவர்களைக் கைது செய்ய வலியுறுத்தி அவரது உறவினர்கள் பாளையங்கோட்டை சிறைச்சாலை முன்பு எட்டு மணி நேரம் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
அதிகாரிகள் நடத்திய பலகட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்த நிலையில், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விஷ்ணு பேச்சுவார்த்தையில் இறங்கினார்.
அப்போது, "சிறைத்துறை கண்காணிப்பாளர் மீது கொலை வழக்கு பதிவு செய்யவேண்டும். முத்து மனோ குடும்பத்துக்கு இழப்பீடாக ரூ.1 கோடி நிவாரணம் வழங்கவேண்டும்," என்று உறவினர்கள் கோரிக்கைகளை முன்வைத்தனர்.
இந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து அவர்களது போராட்டம் ஒரு முடிவுக்கு வந்தது.
வெடிகுண்டு வைத்திருந்த வழக்கின் தொடர்பில் முத்து மனோ கடந்த 8ஆம் தேதி கைதாகி பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், சிறைக் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் முத்து மனோ கல்லால் அடித்துக் கொல்லப்பட்டார்.

