செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
923faeae-695d-4535-8ec2-bd5081d84371
-

20 கிராமத்தினர் கிருமி பயமின்றி மீன்பிடித் திருவிழாவில் பங்கேற்பு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமரா வதியை அடுத்த ஜெ.ஜெ. நகரின் பின்புறம் உள்ள தாழ்பா கண்மாயில் வழக்கம்போல் நடைபெறும் மீன்பிடித் திருவிழா இந்த ஆண்டும் நடைபெற்றது. ஆனால், கொரோனா விதிமுறைகளை காற்றில் பறக்கவிடும் வகையில், 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கூட்டம் கூட்டமாக மீன்பிடித்தனர். முகக்கவசம் அணியாமலும் சமூக இடைவெளியைப் பின்பற்றாமலும் அவர்கள் மீன்பிடித்தது மக்களிடையே இப்போது பயத்தைக் கூட்டியுள்ளது.

'படுக்கைகள் போதிய அளவில் உள்ளன; அச்சம் வேண்டாம்'

சென்னை: சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், "தமிழகத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடும் ஆக்சிஜன் கசிவும் வந்துவிடக் கூடாது என்பதில் முக்கிய கவனம் செலுத்தி வருகிறோம். அதேபோல் சிகிச்சைக்குத் தேவையான அளவில் போதுமான படுக்கை வசதிகளும் உள்ளன. ரெம்டெசிவிர் மருந்தை மக்கள் தாமாகவே எடுத்துக்கொள்ளக் கூடாது. மருத்துவரின் பரிந்துரைப்படி தான் எடுத்துக்கொள்ள வேண்டும்," என்று கூறினார்.

சுதா சேஷய்யன்: இனி வீட்டிலும் முகக்கவசம் போடவேண்டும்

சென்னை: கொரோனா தொற்று எக்கச்சக்கமாக பரவி வரும் நிலையில், இனி வீடுகளுக்குள்ளேயும் முகக்கவசம் அணிந்தாக வேண்டிய கட்டாயம் வந்துவிட்டதாக தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் டாக்டா் சுதா சேஷய்யன் தெரிவித்துள்ளார்.

சுகாதாரத் துறை தகவல்களின்படி கடந்த 12 நாள்களில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கிருமி பாதிப்பு உறுதியாகி உள்ளது. அவா்களில் 50% போ் குடும்ப உறுப்பினா்கள் மூலம் தொற்றுக்குள்ளானவா்கள் என்பது தான் கசப்பான உண்மை. தற்போது குடும்பம், குடும்பமாக கொரோனா பாதிப்பு கண்டறியப்படுகிறது. இதற்கு குடும்ப உறுப்பினா்கள் ஒரே அறைக்குள் பல மணி நேரம் அருகருகே இருப்பதுதான் காரணம் என்று அவர் கூறினார்.

ஆக்சிஜன் தேவைக்கு 104 எண்ணை அழைக்கும்படி அறிவிப்பு

சென்னை: இந்தியா முழுவதும் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவும் நிலையில், தமிழகத்தில் ஆக்சிஜன் தேவைக்கு உடனடியாகத் தொடர்பு கொள்வதற்கான தனி கட்டுப்பாட்டு மையத்தை தமிழக அரசு உருவாக்கியுள்ளது.

ஆக்சிஜன் தேவைப்படும் மருத்துவமனைகளும் தனி நபர்களும் 24 மணி நேரமும் இயங்கும் 104 என்ற அவசர எண்ணில் அழைக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நான்கு லட்சம் தடுப்பூசிகள் தமிழகம் வந்தடைந்தன

சென்னை: தமிழகம் முழுவதும் பல மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு எழுந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் கூறப்பட்ட நிலையில், நேற்று மேலும் நான்கு லட்சம் கோவாக்சின், கொவிஷீல்ட் தடுப்பூசிகள் வந்துள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடிக்கு நேற்று முன்தினம் முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியபோது, தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தடுப்பூசிகளில் முன்கூட்டியே 20 லட்சம் தடுப்பூசி களை அவசரமாக வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.