திரையரங்குகள், பெரிய வணிக வளாகங்கள் மூடப்படும்; ஊரடங்கு உத்தரவு நீடிக்கும்
சென்னை: தமிழகத்தில் கிருமித்தொற்றுப் பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் புதிய கட்டுப்பாடுகளைத் தமிழக அரசு அறிவித்துள்ளது.
கடந்தாண்டு கிருமித்தொற்று தாக்கம் உச்சத்தில் இருந்தபோது அறிவிக்கப்பட்ட விதிமுறைகள் தமிழகத்தில் மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளன.
திங்கட்கிழமை முதல் மாநிலம் முழுவதும் உள்ள திரையரங்குகள், வணிக வளாகங்களை சில நாட்களுக்கு மூடவேண்டும் என அரசு அறிவித்துள்ளது.
மேலும் மாநகராட்சி, நகராட்சிகளில் உள்ள அழகு நிலையங்கள், சிகை அலங்காரக் கடைகள் மறு அறிவிப்பு வரும்வரை மூடப்பட்டிருக்கும்.
உணவகங்கள், தேநீர் கடைகளில் அமர்ந்து சாப்பிட அனுமதி இல்லை. 'பார்சல்' சேவைக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்றும் விடுதிகளில் தங்கி உள்ளவர்களுக்கு அவர்களது அறைகளுக்கே உணவு அனுப்பப்படவேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பொதுமக்கள் நேரில் சென்று வழிபட இயலாது. திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் 50 பேர் மட்டுமே பங்கேற்க முடியும்.
அரசு, தனியார் பேருந்துகளில் நின்றுகொண்டே பயணம் செய்ய அனுமதி இல்லை.
வாடகை கார்களில் ஓட்டுநர் தவிர்த்து மூன்று பேர், ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர்த்து 2 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். இறுதி ஊர்வலங்கள், தகனச் சடங்குகளில் பங்கேற்க 25 பேருக்கு மேல் அனுமதி இல்லை.
தமிழகத்தில் ஏற்கெனவே வார நாட்களில் இரவு நேர ஊரடங்கும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அமலில் உள்ளது. இந்நிலையில் தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.
அதன்படி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் 50 விழுக்காடு ஊழியர்கள் கண்டிப்பாக வீட்டில் இருந்து பணிபுரிய வேண்டும் என்றும் இரவு நேர ஊரடங்கு நீடிக்கும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.
வெளிநாடுகளில் இருந்து விமானம், கப்பல் மூலம் தமிழகம் வரும் அனைவரும் அரசு அறிவித்துள்ள வலைத்தளத்தில் தங்களைப் பற்றிய விவரங்களைப் பதிவு செய்யவேண்டும் என்றும் தமிழகத்திற்குள் நுழையும்போது அந்தப் பதிவு தொடர்பான ஆவணத்தைக் கட்டாயம் காண்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருக்கும்.
ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு என்பதால் சனிக்கிழமை அன்று மாநிலம் முழுவதும் மதுக்கடைகளில் கூட்டம் அலைமோதியது. ஒரே நாளில் 252 கோடி ரூபாய் மதிப்புள்ள மது வகைகள் விற்றுத் தீர்ந்தன.
இதற்கிடையே அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகுமாருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.

