சென்னை: தமிழகத்தில் முழு ஊரடங்கு காரணமாக நேற்று அனைத்து மாவட்டங்களிலும் சாலைகள் வெறிச்சோடின. பொதுமக்கள் தங்கள் வீடுகளிலேயே முடங்கினர்.
தகுந்த காரணங்களின்றி வெளியே சுற்றித் திரிவோரைக் கட்டுப்படுத்த போலிசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அனைத்து மாவட்டங்களிலும் கடைகள் அடைக்கப்பட்டன.
துணிக் கடைகள், கைபேசி விற்பனைக் கூடங்கள், மளிகைக் கடைகள், தேநீர் கடைகள் ஆகியவையும் மூடப்பட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சாலையோரக் கடைகளும் மூடப்பட்டிருந்ததுடன் மக்கள் நடமாட்டமும் அறவே காணப்படவில்லை. மக்கள் அதிகம் கூடும் பகுதிகளும் ஆள் அரவமின்றி வெறிச்சோடிக் காணப்பட்ட நிலையில், தேவையின்றி வாகனங்களில் வெளியே சுற்றியவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஊரடங்கு உத்தரவு திடீரென பிறப்பிக்கப்பட்டதால் திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகள் பாதிக்கப்பட்டன. கோயில்களுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படாத நிலையில் சில இடங்களில் திருமணங்கள் வீதியில் நடைபெற்றதாக மாலைமலர் செய்தி நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் நேற்று ஊரடங்கு காரணமாக 37 லட்சம் கடைகள் மூடப்பட்டிருந்ததாக வணிகர் சங்க பேரமைப்பு தெரிவித்துள்ளது. இதனால் 25 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அச்சங்கம் கூறியுள்ளது.
தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு
இதற்கிடையே சென்னையில் கோவாக்சின் தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் இரண்டாம் தவணை ஊசி போட்டுக்கொள்ள முடியாமல் மக்கள் தவிப்பதாகவும் தி இந்து நாளேடு தெரிவித்துள்ளது. கடந்த 3 நாட்களாக தடுப்பூசி போட்டுக்கொள்ள அதற்கான மையங்களுக்குச் சென்ற பொதுமக்களில் பலர் தடுப்பூசி இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் புதிய ஊரடங்கு அறிவிப்பை அடுத்து சொந்த ஊர் செல்ல முயன்ற பலர் போதிய பேருந்துகள் இல்லாததால் பல மணி நேரம் காத்துக் கிடந்தனர்.
ஆக்சிஜன் தேவை: பிரதமருக்கு முதல்வர் கடிதம்
இதற்கிடையே தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன் பிற மாநிலங்களுக்கு அனுப்பும் மத்திய அரசின் முடிவுக்கு தமிழகம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பாதிப்பு அதிகரிப்பதால் ஆக்சிஜன் தேவையும் அதிகரித்துள்ளது என்று பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதல்வர் பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.
எனவே, தமிழத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு ஆக்சிஜன் அனுப்புவதை உடனடியாக நிறுத்தவேண்டும் என அவர் கூறியுள்ளார்.

