சென்னை: கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து தமிழகத்தில் வங்கிச் சேவை நேரம் குறைக்கப்பட்டுள்ளது.
திங்கட்கிழமை முதல் மாநிலத்தில் உள்ள அனைத்து வங்கிகளிலும் வாடிக்கையாளர் சேவை நேரம் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, அடுத்த அறிவிப்பு வரும் வரை அரை நாள் மட்டுமே இனி வங்கிகள் செயல்படும்.
மாநில வங்கியாளர்கள் குழுமம் இம்முடிவை எடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
இன்று முதல் எதிர்வரும் 30ஆம் தேதி வரை வங்கிச் சேவை நேரம் குறைக்கப்படுவதாக வங்கியாளர்கள் குழுமம் தெரிவித்துள்ளது.
"திங்கட்கிழமை (இன்று) முதல் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் அரை நாள் மட்டுமே இயங்கும். எனவே மறு அறிவிப்பு வரை தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் ஆதார் பதிவு, திருத்தப் பணிகள் நிறுத்திவைக்கப்படும்," என வங்கியாளர்கள் குழுமம் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.
தொற்றுப்பரவல் கட்டுக்குள் வரவில்லை எனில் இக்குழுமம் அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எனக் கூறப்படுகிறது. சேவை நேரம் குறைக்கப்பட்டுள்ளதை அடுத்து வாடிக்கையாளர்களுக்கு சிரமம் ஏற்படாது என்றும் மின்னிலக்கச் சேவையை அதிகம் பயன்படுத்துமாறும் வங்கித்தரப்பில் அறிவுறுத்தப்படுகிறது.

