சென்னை: ஸ்டெர்லைட் ஆலையை தற்காலிகமாகத் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடி தலைமையில் நேற்று கூடிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
தமிழகத்தில் கொரோனாகிருமிப்பரவலின் இரண்டாவது அலை சுனாமியைப் போன்று வேகமாகத் தாக்கி வருகிறது. மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளி களுக்கு நுரையீரல் பாதிப்பு அதிகம் இருந்தால் அவர்களுக்கு 'வென்டிலேட்டர்' சிகிச்சை தேவைப் படுகிறது. இதற்கு செயற்கை உயிர்வாயு தேவைப்படுகிறது. ஆனால் நாடு முழுவதும் கொரோனா நோயாளிகள் அதிகரித்த வண்ணம் இருப்பதால் உயிர்வாயு தோம்பு தட்டுப்பாடாக உள்ளது. பல இடங்களில் உயிர்வாயு கிடைக்காமல் நோயாளிகள் இறக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தூத்துக்குடியில் அடைக்கப்பட்டு கிடக்கும் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம், செயல்பட அனுமதி வழங்கினால் ஆக்சிஜன் தயாரித்து வழங்கத் தயாராக இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது.
அதனைத் தொடர்ந்து தமிழக அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதிக்க முடியாது என்று எதிர்ப்பு தெரிவித்துவிட்டது.
அதே நேரத்தில் மத்திய அரசு தரப்பில் ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசே கையகப்படுத்தி உயிர்வாயு தயாரிக்கலாம் என்று யோசனை வழங்கியது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியும் இதே கருத்தை வலியுறுத்தினார்.
இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அனைத்துக் கட்சி தலைவர்களுடன் நேற்று அவசர ஆலோசனை நடத்தினார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்ற அந்தக் கூட்டத்தில் தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதிக்கலாமா என்பது குறித்தும் ஆலையைத் திறந்து அங்கு தமிழக அரசே உயிர்வாயு தயாரிக்கும் நடவடிக்கையில் ஈடுபடலாமா என்பது குறித்தும் ஆலோசனை நடைபெற்றது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற இந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் அதிமுக சார்பில் ஓ. பன்னீர் செல்வம், விஜயபாஸ்கர், ஆர்பி உதயகுமார் பங்கேற்றனர். திமுக சார்பில் கனிமொழி, ஆர்.எஸ். பாரதி கலந்துகொண்டனர். அங்கீகரிக்கப்பட்ட எட்டுக் கட்சிகளின் முக்கிய தலைவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
உயிர்வாயு உற்பத்தி செய்வதற்காக மட்டுமே ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கலாம். உயிர்வாயு உற்பத்தியைத் தவிர்த்து வேறு எந்த செயல்பாடுகளுக்கும் அனுமதி வழங்கக்கூடாது என்று திமுகவின் கனிமொழி கூறினார்.
ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க தமிழக பா.ஜனதா தலைவர் முருகன் ஆதரவு தெரிவித்தார்.
முத்தரசன், "தமிழகத்தில் உற்பத்தியாகும் உயிர்வாயு அரசின் அனுமதி இல்லாமல் மத்திய அரசு வேறு மாநிலங்களுக்கு வழங்கக் கூடாது. மனிதாபிமான அடிப்படையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உயிர்வாயு உற்பத்தி செய்யலாம்," என்றார்.
இதையடுத்து, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க வேண்டும் என்பது தமிழக அரசின் நோக்கம் அல்ல என்று முதல்வர் பழனிசாமி கூறினார்.
இருந்தாலும் உயிர்வாயு தயாரிக்க ஸ்டெர்லைட் ஆலையை நான்கு மாதங்களுக்குத் திறக்க தற்காலிக அனுமதி அளிக்கலாம் என முடிவு எடுக்கப்பட்டது.
இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறந்தால் மக்கள் போராட்டம் வெடிக்கும் என ஆலை எதிர்ப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் கூறியுள்ளார்.
இதற்கிடையே திமுக ஆட்சி அமைந்த பிறகு எந்தச் சூழலிலும் நச்சு ஆலை ஸ்டெர்லைட் திறக்கப் படாது என்று அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரி வித்துள்ளார்.

