சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை மே 2ஆம் தேதி நடைபெற உள்ளது. அப்போது வேட்பாளர்களின் முகவர்களுக்கு கொரோனா சோதனை கட்டாயம் என தேர்தல் ஆணையம் மறு உறுதிப்படுத்தியுள்ளது.
இது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
"வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு வரும் வேட்பாளர்களின் முகவர்களுக்கு கிருமி சோதனை கட்டாயம். வாக்கு எண்ணிக்கை துவங்கும் 72 மணி நேரத்திற்கு முன்னதாக முகவர்கள் கொரோனா தொற்று இல்லை என்பதைக்காட்டும் சான்றிதழ் வழங்க வேண்டும்.
"வாக்கு எண்ணிக்கையின் போது முகவர்கள் கட்டாயம் முககவசம் அணிந்திருக்க வேண்டும். அலுவலர்கள் மற்றும் முகவர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். சராசரியாக 14 மேசைகள் அமைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடைபெறும். ஒவ்வொரு மேசைக்கும் ஒரு சிசிடிவி கேமரா அமைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
"பதிவான தபால் வாக்குகளை முதலில் 500, 500ஆக பிரித்து பிறகு எண்ணப்படும். குலுக்கள் முறையில் ஒரு தொகுதிக்கு ஐந்து விவிபேட் இயந்திரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை சரிபார்க்கப்படும். ஏப்ரல் 23ஆம் தேதி வரை ஐந்து லட்சம் தபால் வாக்குகள் பெறப்பட்டுள்ளன," என்று அறிக்கையில் திரு சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

