சென்னை: தமிழகத்தில் கிருமித் தொற்றுக்கு 19 நாட்களே ஆன குழந்தை உட்பட 82 பேர் உயிரிழந்து உள்ளனர். தமிழகத்தில் ஞாயிறு அன்று மட்டும் புதிதாக 15,659 பேர் பாதிக்கப்பட்டனர்.
இதனால் கிருமித்தொற்று எண்ணிக்கை ஒரு லட்சத்து 5,180ஐ தொட்டுள்ளது என்று தமிழக ஊடகங்களின் தகவல்கள் தெரிவித்தன. இந்த நிலையில் அதே நாளில் புதிதாக 1 லட்சத்து 22 ஆயிரத்து 610 பேருக்கு கொரோனா பரி சோதனை செய்யப்பட்டது.
அதில் மொத்தம் 15,659 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நேற்று அதிகபட்சமாக சென்னையில் 4,206 பேரும் செங்கல்பட்டில் 1,242 பேரும் கோவையில் 1,038 பேரும் குறைந்தபட்சமாக நீலகிரியில் 79 பேரும் அரியலூரில் 49 பேரும் பெரம்பலூரில் 15 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டனர். தமிழகத்தில் இதுவரை 2 கோடியே 16 லட்சத்து 47 ஆயிரத்து 723 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதில் 10 லட்சத்து 81 ஆயிரத்து 988 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஞாயிறு அன்று ஒரே நாளில் மட்டும் கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 31 பேரும் தனியார் மருத்துவமனையில் 51 பேரும் என 82 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதில் பிறந்து 19 நாட்கள் மட்டுமே ஆன சென்னையைச் சேர்ந்த பெண் குழந்தை கடந்த 22ஆம் தேதி காய்ச்சல் காரணமாக சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. அந்த குழந்தைக்கு கொரோனா பரிசோதனை செய்தபோது தொற்று உறுதி செய்யப்பட்டது. மருத்துவர்கள் குழந்தைக்குத் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தது.
தமிழகத்தில் இதுவரை 13 ஆயிரத்து 557 பேர் கொரோனா நோய்த் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

