ஸ்டாலின்: மக்களைக் காப்பாற்றுங்கள்

ஸ்டாலின்: மக்களைக் காப்பாற்றுங்கள்

2 mins read
730c057a-4629-444d-8e72-045c15b98735
-

சென்னை: திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் "மக்களைக் காப்பாற்றுங்கள், மக்களைக் காப்பாற்றுங்கள்," என இன்று வெளியிட்ட காணொளி ஒன்றில் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளார்.

'நம்மையும் காப்போம், நாட்டையும் காப்போம்' என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட அந்த காணொளியில், "ஒவ்வொருவரும் தங்கள் உடல்நலனைப் பாதுகாத்து, நோய் வராமல் பாதுகாக்க வேண்டிய காலகட்டம் இது," என்று குறிப்பிட்டுள்ளார்.

"மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ள கட்டுப்பாடுகளை முழுமையாகப் பின்பற்றி நடந்துகொள்ளுங்கள்.

"அவசியப் பணிகளுக்காக மட்டும், அதற்கான இடங்களுக்கு மட்டும் செல்லுங்கள். அவசியமற்ற பயணங்களைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். வீட்டில் இருங்கள். வீட்டில் இருந்து வேலை பாருங்கள். வீட்டுக்குள்ளும் போதிய தனிமனித இடைவெளியைக் கடைப்பிடியுங்கள்.

தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளுங்கள். மிகத் தீவிரமான உடல் நலக் கோளாறு உள்ளவர்கள் தங்களது மருத்துவரைக் கலந்தாலோசனை செய்தபிறகு தடுப்பூசியைப் பயன்படுத்துங்கள்," என்று அவர் கூறியுள்ளார். "அரசுத் தரப்பில் அவசரமாக சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஆக்சிஜன், தடுப்பூசி ஆகியவற்றின் கையிருப்பை அதிகரிக்க வேண்டும். "அரசு மருத்துவமனைகளில் படுக்கை வசதியைப் புதிதாக உருவாக்க வேண்டும். போதிய எண்ணிக்கையில் வென்டிலேட்டர் களைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

"கொரோனா நோய்த் தொற்றுத் தடுப்பு மற்றும் சிகிச்சைக்குத் தேவையான மருந்துகள், புதிய படுக்கை வசதிகள் கொண்ட தற்காலிக மருத்துவமனைகள் அமைக்கப்பட வேண்டும். மாநிலத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் எல்லாம் கொரோனா சிகிச்சை அளிப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

"மக்கள் பாதுகாப்பை ஒரு இயக்கமாக மாற்ற வேண்டும். முகக்கவசம் அணிவதை ஒரு இயக்கமாக மாற்ற வேண்டும். அனைவருக்கும் பரிசோதனை, அனைவருக்கும் தடுப்பூசி என்பதை இயக்கமாக மாற்ற வேண்டும்.

"தற்போதைய காபந்து அரசு மக்களைக் காப்பதற்கான நடவடிக்கைகளைத் தொய்வில்லாமல் மேற்கொள்ள வேண்டும். "அதே நேரத்தில், மக்களின் உயிரைப் பாதுகாப்பதில் அலட்சியம் வேண்டாம், அலட்சியம் வேண்டாம் என்று மத்திய அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.

"மக்களைக் காப்பாற்றுங்கள், மக்களைக் காப்பாற்றுங்கள் என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். வரலாற்றின் பழிக்கு ஆளாகாதீர்கள், ஆளாகாதீர்கள் என்று எச்சரிக்கவும் கடமைப்பட்டுள்ளேன். "புதிய அரசு அமைந்தவுடன் மக்கள் நலன் காக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் துரிதமாக மேற்கொள்ளப்படும்.

"எப்போதும் மக்கள் கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் இருந்து நம்மையும் காப்போம், நாட்டையும் காப்போம்," என்று காணொளியில் ஸ்டாலின் கூறியுள்ளதாக 'இந்து தமிழ் திசை' தெரிவித்தது.