சென்னை: தமிழக அரசு ஒன்றரை கோடி தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்ய ஆணை பிறப்பித்துள்ளது. வரும் மே 1ஆம் தேதி தமிழகத்தில் 18வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்படவுள்ளது.
கிருமித்தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஒன்றரை கோடி (15 மில்லியன்) தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்ய தமிழக அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் முதற்கட்டமாக 1.50 கோடி தடுப்பூசிகளை தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் (TNMSC) மூலமாக கொள்முதல் செய்து வழங்குவதற்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
"இந்தியாவிலேயே அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என ஏற்கெனவே அறிவித்த முதல் மாநிலம் தமிழ்நாடு. கொரோனா நோய்த் தொற்றுப் பரவல் அதிகரித்து வரும் நிலையில் அதனைக் கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணிகள் தமிழ்நாட்டில் அரசால் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
"தற்போது 45 வயதிற்கு மேற்பட்ட நபர்களுக்கு போடப்பட்டு வரும் இலவச தடுப்பூசிப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை (27-04-2021) 55.51 லட்சம் நபர்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.
"மேலும் வரும் மே 1ஆம் தேதி முதல் 18 வயதிற்கு மேல் 44 வயது வரை உள்ளவர்களுக்கு ஏற்கெனவே அறிவித்தவாறு இலவசமாக தடுப்பூசி போட்டுக்கொள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்பேரில் தேவையான முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
"இதற்கென முதற்கட்டமாக 1.50 கோடி தடுப்பூசிகள் தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் மூலமாக கொள்முதல் செய்து வழங்குவதற்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது," என்று அந்த செய்தி வெளியீடு குறிப்பிட்டது.
இதற்கிடையே நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கான முன்பதிவு நேற்று முதல் தொடங்கியது. இதற்கான இணையத் தளத்தில் பதிவு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

