சென்னை: கொரோனா இரண்டாவது அலையின் தாக்கத்துக்கு 12 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் பாதிக்கப்படுவது அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த ஆண்டு முதல் தற்போது வரை தமிழ்நாட்டில் 12 வயதுக்கு உட்பட்ட 40,323 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 20,439 பேர் பெண் குழந்தைகள், 19,884 பேர் ஆண் குழந்தைகள் ஆவர். ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 12 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 3.62% ஆகும்.
தொற்று அறிகுறியுடன் இருப்பவர்கள் வீடுகளில் முறையாகத் தனிமைப்படுத்திக் கொள்ளாததன் காரணமாகவே குழந்தை களும் அதிக பாதிப்புக்கு ஆளாகின்றனர் என்று மருத்துவர்கள் கூறுவதாக நியூஸ் 18 ஊடகம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக கடந்த ஐந்து நாட்களில் மட்டும் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் ஒருநாள் பாதிப்பு தொடர்ந்து 500க்கு மேலாக அதிகரித்து வருவதாகவும் அது குறிப்பிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா கிருமிப் பரவல் நாளும் அதிகரித்து வரும் நிலையில், தலைநகர் சென்னையில் இத்தொற்று பாதிப்பு சுனாமிபோல் மீண்டும் அதிவேகமாகப் பரவி வருவதாகவும் மக்கள் கவனமாக இருக்கவேண்டும் என்றும் சிறப்பு ஒருங்கிணைப்பு அதிகாரி எம்.ஏ.சித்திக் தெரிவித்துள்ளதாக மற்றொரு ஊடகத் தகவல் கூறியுள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையைக் கண்காணிக்க நியமிக்கப்பட்டுள்ள சென்னைக்கான சிறப்பு ஒருங்கிணைப்பு அதிகாரி எம்.ஏ.சித்திக் ஐஏஎஸ் நேற்று சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியபோது, "சென்னை மக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டிய நேரம் இது.
"மக்கள் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க வேண்டும். விழிப்புடன் இருக்க வேண்டும். சென்னையில் மட்டும் தொற்று பாதித்த 25,000 பேருக்கு வீட்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சென்னையில் போதிய ஆக்சிஜன் இருப்பில் உள்ளது," என்றார்.
இந்நிலையில், ஒருநாள் கொரோனா பாதிப்பு கடந்த 24 மணி நேரத்தில் 16,000 பேரைத் தாண்டியுள்ளது. பெருந்தொற்றுக்கு பலியாவோரின் எண்ணிக்கை நூறு பேரை நெருங்கி உள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
"ஒரே நாளில் 12 வயதுக்குட்பட்ட 571 சிறுவர், சிறுமிகள் புதிதாக கொரோனா தொற்றுப் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். 110,308 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
"புதிதாக 16,665 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. பெருந்தொற்று பாதிப்பிலிருந்து 15,114 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இத்ெதாற்றுக்கு 98 பேர் உயிரிழந்தனர். சென்னை நகரில் மேலும் 4,764 பேருக்கு இப்பாதிப்பு உறுதியாகியுள்ளது," என மாநில சுகாதாரத் துறை அறிக்கையில் கூறியுள்ளது.

