சென்னை: கடந்த ஆண்டு கொரோனா கிருமித்தொற்று பரவல் அதிகரித்தபோது கபசுரக் குடிநீர் வாங்குவதற்கு மக்கள் குவிந்தனர். அதேேபால் இப்போது கடந்த மூன்று நாள்களாக ரெம்டெசிவிர் மருந்தை வாங்குவதற்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி வாயிலில் மக்கள் குவிந்து வருகிறார்கள்.
அரசு அதிகாரிகள் இந்த மருந்து குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் மக்கள் கூட்டமாக நிற்பதைத் தடுக்கவும் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளதாக சமயம் தமிழ் ஊடகம் தெரிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து விடுபட இந்த மருந்து முக்கிய பங்கு வகிப்பதாகக் கூறப்படுவதால் அந்த மருந்தை வாங்குவதற்காக பொதுமக்கள் நீண்ட வரிசையில் அதிகாலை மூன்று மணியிலிருந்து கல்லூரி வாயிலில் கால்கடுக்க காத்திருக்கின்றனர்.
இதனால், தனி மனித இடைவெளி பின்பற்றப்படாமல் கூட்ட நெரிசலில் மக்கள் முண்டியடிப்பதால் மருந்து வாங்க வரிசை பிடித்து நிற்பவர்களிடம் கிருமித்தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், தனது கருத்தை ஒன் இந்தியா ஊடகத்தில் பதிவு செய்துள்ள பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வ விநாயகம் காெணாளியும் வெளியிட்டுள்ளார்.
"ரெம்டெசிவிர் உயிர் காக்கும் மருந்தல்ல. கொரோனா உயிரிழப்பை இந்த மருந்தால் தடுக்க முடியாது. உலக சுகாதார நிறுவனமும் தமிழக சுகாதாரத் துறையும் வெளியிட்டுள்ள நெறிமுறைகளில் இதுபற்றி கூறப்பட்டுள்ளது.
"ரெம்டெசிவிர் மருந்தைப் பயன் படுத்தினால் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் காலம் குறையலாம். கிருமியால் பாதிக்கப்பட்டவர்களில் ஒரு சிலருக்கு மட்டுமே இம்மருந்து தேவைப்படும். அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் போதுமான அளவு இந்த மருந்து கையிருப்பில் உள்ளது. சுகாதாதாரத் துறை வழிமுறைகளின்படி யாருக்கு இந்த மருந்து தேவைப்படுகிறதோ அவர்களுக்கு வழங்குகின்றனர்," என்று கூறியுள்ளார்.
ரெம்டெசிவிர் ஊசியைப் போட்டுக்கொள்வதால் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் காலத்தைக் குறைக்கலாம். மற்றபடி இந்த மருந்தால் கொரோனாவில் இருந்து குணம் பெறும் சூழல் இல்லை. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் ஒரு சிலருக்கு மட்டுமே இது தேவைப்படலாம். ஆனால், அனைவருக்கும் இம்மருந்து முக்கியம் என்ற மாயை தேவையற்றது.
பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வ விநாயகம்

