சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களும் அவர்களது முகவர்களும் 48 மணி நேரத்துக்கு முன்பாக கொவிட்-19 பரிசோதனையைச் செய்து 'தொற்றில்லை' என்ற சான்றிதழுடன் வந்தால் மட்டுமே வாக்கு எண்ணும் மையங்களுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவர் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்தத் தகவலை சென்னை மாநகராட்சி ஆணையர் கோ. பிரகாசும் உறுதிப்படுத்தி உள்ளார்.
"கொவிட்-19 தொற்றில்லை என்ற சான்று அல்லது இருமுறை தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான சான்றுகளைக் கொண்டு வந்தால் மட்டுமே வாக்கு எண்ணும் மையங்களுக்குள் வேட்பாளர்களும் அவர்களது முகவர்களும் அனுமதிக்கப்படுவா்," என்று அவர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் கடந்த ஆறாம் தேதிஅன்று தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் மே 2ஆம் தேதி எண்ணப்பட உள்ளன.
இந்நிலையில், வாக்கு எண்ணிக்கைக்கு 48 மணி நேரத்துக்கு முன்பாக வேட்பாளர்கள், வாக்குச்சாவடி முகவா்கள் உள்ளிட்டோருக்கு கொவிட்-19 பரிசோதனை செய்யும் பணியை சென்னை மாநகராட்சி மேற்கொண்டு வருவதாக தினமணி நாளேடு கூறியுள்ளது.
இதுதொடா்பாக ஆணையா் பிரகாஷ் வெளியிட்டுள்ள அறிக்கை யில், "வாக்கு எண்ணிக்கைக்குப் பின்னா் சான்றிதழைப் பெறுவதற்கு வெற்றிபெற்ற வேட்பாளருடன் இரு வா் மட்டுமே அனுமதிக்கப்படுவா். அதன்பிறகு, வெற்றிக் கொண்டாட்டம், கோலாகலம் என எதுவும் கூடாது," என்று கூறப்பட்டுள்ளது.
தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், "வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட இருந்த தேர்தல் அலுவலர்கள் பலரும் கிருமித்தொற்றால் பாதிக் கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர்.
"இதன் காரணமாக, அவர் களுக்கு மாற்றாக இந்திய தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று கூடுதல் தேர்தல் அதிகாரிகளை நியமித்துள்ளோம்.
"இதன்படி தமிழகம் முழுவதும் வாக்கு எண்ணும் பணிகளுக்காக 16,387 தேர்தல் அலுவலர்கள் தயா ராக உள்ளனர்," என்று கூறினார்.
இதற்கிடையே, வாக்கு எண்ணும் மையங்களுக்குள் நுழைய வேட்பாளர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் விதித்திருப்பதாக மற்றொரு ஊடகத் தகவலும் குறிப்பிட்டுள்ளது.
இதுகுறித்து இந்திய தேர்தல் ஆணையம், அனைத்து மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில், "வாக்கு எண்ணும் வெளிப்புற பகுதி களில் பொதுமக்கள் கூடக்கூடாது.
"வாக்கு எண்ணும் மையங்களில் உள்ளவர்களுக்கு முகக்கவசம், கிருமிநாசினி, முகத்தடுப்பு, கையுறைகள் அளிக்கப்பட வேண்டும். இந்த விதிமுறைகளை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்," என்று கூறப்பட்டுள்ளது.

