சென்னை: அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் நாளை (மே 1ஆம் தேதி) முதல் பள்ளிக்கு வரத் தேவையில்லை என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
ஆனாலும் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு ஆசிரியர்கள் வீட்டில் இருந்தபடி இணையம் மூலம் மாணவர்களுக்குக் கற்பித்து வர வேண்டும்.
அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் புதன்கிழமை பின்னேரத்தில் அனுப்பிய கடிதம் இவ்வாறு குறிப்பிடுகிறது.
"அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் எல்லாரும் கொவிட்-19 சூழ்நிலையில் மே 1 முதல் பள்ளிக்கு வரத் தேவையில்லை.
"எனினும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு தேதி குறித்த அறிவிப்பு வரும் வரை அவர்களுக்கான வழிகாட்டுதல்களை ஆசிரியர்கள் வீட்டிலிருந்தபடியே வழங்க வேண்டும்.
"இணைப்புப் பாடம், பயிற்சிப் புத்தகத்தில் உள்ள பாடங்களைக் கல்வித் தொலைக்காட்சி வாயிலாக மற்ற வகுப்பு மாணவர்கள் கற்கவும் பயிற்சிகளை மேற்கொள்ளவும் வீட்டிலிருந்தபடியே ஆசிரியர்கள் தொடர்ந்து வழிகாட்டல்களை வழங்க வேண்டும்.
"இதற்காக மாணவர்கள் மற்றும் பெற்றோரிடம் உள்ள கைபேசி, வாட்ஸ்அப் அல்லது பிற மின்னிலக்க வழிகளைப் பயன்படுத்தலாம்,'' என்று அறிவிப்பு தெரிவித்தது.
அடுத்த கல்வி ஆண்டுக்குப் பள்ளிக்கூடங்களைத் தயார் செய்யவும் ஆயத்தப் பணிகளை மேற்கொள்ளவும் மாணவர்களுக்கான பயிற்சிகளை ஆய்வு செய்து அதற்கான தொடர் நடவடிக்கை எடுக்கவும் மே மாதக் கடைசி வாரத்தில் ஆசிரியர்கள் பள்ளிக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என்றும் இதற்கான அறிவிப்பு தனியே வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக இதன் தொடர்பில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப் பட்டது. கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ள போதிலும் பள்ளிக்கு ஆசிரியர்கள் வழக்கமாக சென்று வருகின்றனர்.
அவர்கள் வீட்டில் இருந்து இணையம் வழியில் பணியாற்றிட அரசு அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
கொரோனா 2வது அலை படு மோசமாக அதிகமாகி வரும் சூழலில் அனைத்து வகை கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டு இருப்பதும் ஆனால் ஆசிரியர்கள் பல சிரமங்களுக்கு நடுவே பள்ளிக்குச் செல்லவேண்டிய தேவை இருப்பதும் அந்தக் கோரிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டது.

