சென்னை: தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட பத்து மாவட்டங்களில் முழு ஊரடங்கு விதிக்கப்பட உள்ளதாக பல ஊடகங்களில் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
அதன் தொடர்பில் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, தேனி, திருப்பூர் ஆகிய ஆறு மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக தலைமைச் செயலாளர் நேற்று ஆலோசனை நடத்த இருந்ததாகவும் ஊடகங்கள் தெரிவித்தன.
கொவிட்-19 இரண்டாவது அலை காரணமாக நாளுக்கு நாள் மோசமடைந்து வரும் இந்தியாவில் பாதிப்பு அதிகம் இருக்கின்ற 150 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அறிவிக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு பரிந்துரை செய்ய மத்திய சுகா தாரத் துறை முடிவு செய்துள்ளது.
மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், கர்நாடகா, கேரளா, ராஜஸ்தான், குஜராத், சத்தீஸ்கர், தமிழ்நாடு ஆகிய எட்டு மாநிலங்களில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் கொவிட்-19 கிருமிப் பரவலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மொத்தம் பாதிக்கப்பட்டு இருப்போரில் 60% இந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். தமிழகத்தில் ஒரு நாளில் 16,665 பேர் பாதிக்கப்பட்ட தாகவும் 98 பேர் உயிரிழந்ததாகவும் நேற்று அறிவிக்கப்பட்டது.
சென்னையில் மட்டும் 4,764 பேர் பாதிக்கப்பட்டனர். செங்கல் பட்டு, கோவை உள்ளிட்ட மாவட் டங்களிலும் பாதிப்பு அதிகமாக இருக்கிறது.
ஆகையால், இப்போதைய நிலவரங்களைக் கவனத்தில் கொண்டு பார்க்கையில் சென்னை உட்பட மொத்தம் பத்து மாவட்டங்களில் முழு ஊரடங்கு விதிக்கப்படும் வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

