சென்னை: நாளை தமிழக சட்ட மன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட உள்ள சூழ்நிலையில், இன்றும் நாளையும் முழு ஊரடங்கை பிறப்பிக்கும்படி சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்குப் பரிந்துரை செய்திருந்தது.
இதற்கு உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசுத் தரப்பு வழக்கறிஞர் சத்திய நாராயணன் விளக்கம் அளித்தபோது, "தமிழகத்தில் உழைப்பாளர்கள் தினமான இன்று பொது விடுமுறை என்பதால் முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டிய அவசியமில்லை.
"அத்துடன், 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்குத் தடுப்பூசி போடும் திட்டமும் ெதாடங்கப்பட உள்ளதால் முழு ஊரடங்கு பிறப்பிக்க முடியாது," என்றார்.
அதேசமயம், ஞாயிறுதோறும் கடைப்பிடிக்கப்படும் முழு ஊரடங்கு நாளை அமலில் இருக்கும் என்றும் வழக்கறிஞர் விளக்கமளித்துள்ளதாக நியூஸ்டிஎம் ஊடகத் தகவல் கூறியுள்ளது.
இதற்கிடையே, மாநிலத்தில் கட்டுப்பாடுகள், தளர்வுகளுடன் நடப்பில் இருந்து வரும் ஊரடங்கை மறு அறிவிப்பு வரும் வரை நீட்டிப்பதாகவும் அரசு அறிவித்துள்ளது.
அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கும் ஞாயிறுதோறும் முழு ஊரடங்கும் தொடரும்.
"தமிழகத்தில் கொரோனா தடுப்பு பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றி திரைப்பட படப்பிடிப்பு, சின்னத்திரை படப்பிடிப்புகளை நடத்தலாம்.
"முழு ஊரடங்கு சமயத்தில் சென்னையில் குறைந்த அளவில் மெட்ரோ ரயில்களை இயக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
"நாளை மட்டும் வேட்பாளர்கள், முகவர்கள் உள்ளிட்டோருக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை," என்று கூறப்பட்டுள்ளது.

