சென்னை: தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையின் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாகவும் இதனால் அடுத்த 10 நாள்களுக்கு பொதுமக்கள் எச்சரிக்கையாகவும் கவனமாகவும் இருக்கவேண்டும் என்றும் சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தி உள்ளதாக ஏஷியாநெட் ஊடகத் தகவல் தெரிவித்துள்ளது.
அத்துடன், "மே 1ஆம் தேதி 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்படும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
"அதற்கான முன்பதிவும் தொடங்கிவிட்ட நிலையில், அரசு கொள்முதல் ஆணை பிறப்பித்த ஒன்றரை கோடி தடுப்பூசிகள் எப்போது வந்து சேரும் என்பதை திட்டவட்டமாகக் கூறமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
"அதனால், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடுவது தற்போது சந்தேகம்தான். காலதாமதம்கூட ஏற்படலாம்," என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
இருப்பினும், 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்குத் தேவையான இருப்பு உள்ளதால் அவர்களுக்கு வழக்கம்போல் தடுப்பூசி போடும் பணி தொடரும். அதில் எந்த சந் தேகமும் இல்லை," என்றார்.
சென்னை எழும்பூர் தாய் சேய் நல மருத்துவமனையில் 250 ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய படுக்கை வசதிகளைச் சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழகத்தைப் பொறுத்தவரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படவில்லை. இருப்பினும் சிறு ஊரடங்கு போன்று பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டுள்ளன. அடுத்துவரும் 10 நாள்களுக்கு மக்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்," என கூறினார்.
கொரோனா தொற்று ஏற்பட்ட அனைவருக்கும் ரெம்டெசிவிர் மருந்து அவசியம் இல்லை என்று கூறிய அவர், "நோய் பாதித்த 30% நோயாளிகளுக்கு மட்டுமே இந்த மருந்து தேவைப்படும்.
"மக்களுக்கு கொரோனா தடுப்பூசி இலவசமாகப் போடப்பட்டு வருவதால் அதை நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும்," என்றும் வலியுறுத்தி உள்ளார்.

