சென்னை: சென்னை விமான நிலையத்தில் நூறு கோடி பெறுமானமுள்ள போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
சென்ற வியாழக்கிழமை இரவு தென் ஆப்பிரிக்காவின் ஜோஹானஸ் பர்க் நகரிலிருந்து 'கத்தார் ஏர்வேஸ்' விமானம் மூலம் வந்த இருவர் மீது சுங்கத் துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
டான்சானியா நாட்டைச் சேர்ந்த டேபோரா எலையா, 46, என்ற பெண், பீலிக் ஒபடியா, 45, ஆகிய இருவரும் மருத்துவ சிகிச்சைக்காக இந்தியா வந்துள்ளதாக அதிகாரிகளிடம் கூறினர்.
கர்நாடகா மாநிலத்தில் பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். தென் ஆப்பிரிக்காவிலிருந்து பெங்களூருக்கு நேரடியாக வரும் விமானத்தில் டிக்கெட் கிடைக்காததால் சென்னை வழியாக பெங்களூரு செல்ல உள்ளோம் என்றும் அவர்கள் கூறினர்.
ஆனால் அவர்களின் பதிலில் திருப்தி அடையாத சுங்கத் துறையினர், இருவர் வைத்திருந்த 'ஸ்டோலர் பேக்கை' சோதனை யிட்டதாக தினமலர் வெளியிட்ட தகவல் தெரிவித்தது.
அப்போது, அதில் வெள்ளை நிற தூள் 15.6 கிலோ எடையில் இருந்தது. அந்தத் தூளை, ஆய் வகத்திற்கு அனுப்பி பரிசோதித்ததில் அது சுத்தமான ஹெராயின் போதை பொருள் என்பது தெரிந்தது. அதன் மதிப்பு 100 கோடி ரூபாயாகும்.
அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், போதை பொருள் கடத்தலில் ஈடுபட்ட இருவரையும் கைது செய்துள்ளனர். இருவரிடமும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.